போபால்: அரசு வேலை வாய்ப்புகளில் மத்தியப் பிரதேச பாஜக அரசு பாம்பு போல அமர்ந்திருப்பதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் கையில் பிளாஸ்டிக் பாம்புகளுடன் இன்று போராட்டம் நடத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கர் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக பிளாஸ்டிக் பாம்பு மற்றும் கூடைகளுடன் கூடி மாநிலத்தின் இளைஞர்களுக்கு வேலை தர அரசு தவறிவிட்டதாக முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம் குறித்து பேசிய மத்தியப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் கூறும்போது, “மாநில அரசு காவல், கல்வி, நீர்வளம், மற்றும் சுகாதாரத் துறைகளில் பணியமர்த்தலை நிறுத்திவிட்ட நிலையில், மாநில இளைஞர்கள் வேலைக்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். மாநில அரசு ஒரு பாம்பு போல இளைஞர்களைக் கொத்தி விரட்டிக் கொண்டு இருக்கிறது. அரசு வேலைகளின் மீது பாம்பு போல அமர்ந்து கொண்டிருக்கிறது பாஜக அரசு.
அதனால், இந்த வேலை வாய்ப்பின்மை விவகாரம் குறித்து அரசுக்கு உணர்த்தும் விதமாக இன்று நாங்கள் இந்த நூதன போராட்டத்தை நடத்துகிறோம்” என்று தெரிவித்தார். மேலும், மாநிலத்தில் கல்வித் துறையில் மட்டும் 70,000 இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், அரசு அதற்கு கவனம் கொடுக்க தயாராக இல்லை என்று உமாங் குற்றம்சாட்டினார்.