ஸ்ரீவைகுண்டம் பள்ளி மாணவர் மீதான தாக்குதல்: ஆட்சியர், எஸ்.பி நடவடிக்கை எடுக்க எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு

சென்னை: ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவர் மீது அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சட்டப்படி வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரத்தைச் சேர்ந்த மாணவர் தேவேந்திரராஜ் (வயது 17) என்பவர் நேற்று தேர்வு எழுதுவதற்காக பேருந்தில் சென்றார். கெட்டியம்மாள்புரம் என்ற இடத்தின் அருகே பேருந்து வந்தபோது, ஒரு கும்பல் பேருந்தை வழிமறித்து தேவேந்திரராஜை பேருந்தில் இருந்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த தேவேந்திரராஜுக்கு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், உறுப்பினர்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தனர். வழக்கை விசாரித்த ஆணையம் பிறப்பித்த உத்தரவின் விவரம்: பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர் தேவேந்திரராஜை சிலர் சாதி ரீதியாக வன்கொடுமை செய்யும் நோக்கத்துடன் அரிவாளால் வெட்டி கொடுங்காயங்களை ஏற்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது.

இந்த குற்ற செயலில் லட்சுமணன் (19) என்ற இளைஞரும் மேலும் இரண்டு சிறுவர்களும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் தன்னிச்சையாக இந்த செயலில் ஈடுபட வாய்ப்பு இல்லை. வேறு சிலரின் திட்டமிட்ட தூண்டுதலின் பேரில் இந்த குற்ற சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்க முடியாது. அவர்களை சிறார் சீர்திருத்த பள்ளிக்கே அனுப்ப முடியும். இந்த காரணத்தால், திட்டமிட்டே சாதிய சமூக விரோதிகள் சிறுவர்களை இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள் என்பதும் வெளிப்படையாக தெரிகிறது.

இந்தக் குற்ற சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை ஏப்ரல் 2-ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும், என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. | விரிவான செய்திக்கு > தூத்துக்குடி அருகே பேருந்தில் சென்ற 17 வயது மாணவரை அரிவாளால் வெட்டிய 3 சிறுவர்கள் கைது: நடந்தது என்ன?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.