78 வருடங்களாக நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை – பாக்.முன்னாள் வீரரின் கருத்துக்கு யோக்ராஜ் சிங் பதிலடி

மும்பை,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தனது பிரிவில் (ஏ பிரிவு) கடைசி இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இதனால் அந்த அணியை அந்நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இதனிடையே அரசியல் காரணங்களை புறம் தள்ளினால் இந்தியாவின் வீரர்கள் மிகவும் நன்றாக உள்ளனர். அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையாகவே நல்ல கிரிக்கெட் அணி என்றால் 10 டெஸ்ட், 10 ஒருநாள், 10 டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுங்கள். அப்போது யார் சிறந்தவர் என்பது தெளிவாகத் தெரிய வரும். நமது பிரச்சினைகளை தீர்த்து சரியான வழியில் சென்று சரியாக தயாரானால் இந்தியாவுக்கும் இந்த உலகுக்கும் பாகிஸ்தான் திடமான பதிலை சொல்ல முடியும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சக்லைன் முஸ்தாக்கின் இந்த கருத்திற்கு இந்திய முன்னாள் வீரர் யோக்ராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “நான் சக்லைன் முஸ்தாக்கின் கருத்தை படித்தேன். அவர்களுக்கு ஒரு விஷயத்தை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. அவர்கள் பேச வேண்டும் என்று பேசுகிறார்கள். அவர்கள் 78 வருடங்களாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு நாம் என்ன கற்பித்து விட முடியும்? அவர்கள் வீரர்களை தொடர்ந்து விமர்சிக்க கூடிய அவர்களே என்ன கற்பித்து விட முடியும்?

ஒரு நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்பதை அவர்கள் இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாடுவது உள்ளூர் அணிக்கு எதிராக விளையாடுவது போல உணர்கிறேன். பாகிஸ்தான் அணி வேண்டுமானால் இந்திய பி அணியுடன் விளையாடலாம்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.