Ever youth: வயசானாலும் உங்க இளமை குறையாமல் இருக்க 15 டிப்ஸ்..!

யாராவது உங்களை ‘அங்கிள்’ என்றோ ‘ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? டோன்ட் வொர்ரி… முதுமையைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியின் இணைப்பேராசிரியரும் வாழ்வியல்கலை நிபுணருமான டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்.

1.‘ஆன்ட்டி ஏஜிங்’ என்றாலே ‘ஆன்டிஆக்ஸிடன்ட்’தான் நினைவுக்கு வரவேண்டும். வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம், செலினியம் இவை அனைத்தையுமே ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறது நவீன அறிவியல். இந்தச் சத்துக்கள் நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் முதுமையை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போடலாம்.

2. நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.

இளமை டிப்ஸ்

3. மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.

4. ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது, ‘ப்ராஸ்டேட்’ சுரப்பி வீக்கமடையும். அவர்கள், சுரைக்காயை, பூண்டு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், மிகவும் நல்லது.

5. மேலே சொன்ன எதையுமே என்னால் வாங்கிச் செய்து சாப்பிட முடியாது என்பவர்கள், திரிபலாசூரணம் சாப்பிடலாம். நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த சூரணத்தை முதல் நாள் இரவே ஒரு மண் குவளையில் 2 டீஸ்பூன் போட்டு, தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும், காலையில் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இது நரையைத் தடுக்கும். மலச்சிக்கல் தீரும். சரும நோய்கள் சரியாகும்.

6. ஒவ்வொரு வேளை உணவுடனும் ஒரு பச்சை நிறக் காய் அல்லது கனியைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் காய் அல்லது பழத்தைச் சாப்பிடுவது கூடுதல் நலம்.

இளமை டிப்ஸ்

7. நடுத்தர வயதில், தோல் பராமரிப்புக்குக் கண்டிப்பாக வைட்டமின் இ தேவை. முளைகட்டிய தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள் கைவசம்.

8. அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில் கிடைத்துவிடும். சைவம் சாப்பிடுபவர்கள் அதற்கு மாற்றாக எள் மற்றும் கொட்டைப் பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

9. வெற்றிலையில் குரோமியம் மிக அதிக அளவில் உள்ளது. தினமும் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட வேண்டும். இளமையைத் தக்க வைப்பதுடன், சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

10. சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் மட்டுமே நல்லது. மற்ற எண்ணெய்களுக்கு கூடிய விரைவில் குட்பை சொல்லுங்கள்.

11. முகம் கழுவியதும் அல்லது குளித்ததும் டவல் அல்லது கைக்குட்டையால், மேலிருந்து கீழ்நோக்கி அழுந்தத் துடைக்கக் கூடாது. வயது ஏற ஏற, நம் சருமம் தளர ஆரம்பிக்கிறது. அதை, நாமும் அழுத்தினால், சீக்கிரமே முகம் தொங்கிவிடும். எப்போதுமே, முகம் கழுவிய பின் ஒற்றி எடுப்பதுதான் சிறந்தது. இல்லையெனில், அப்படியே விட்டுவிடலாம்.

எண்ணெய்க் குளியல்

12. குளிக்கும்போது, சோப்பைக் கைகளில் தேய்த்துக்கொண்டு, அந்த நுரையை உடல், முகம், கை, கால்களில் கீழிருந்து மேல்நோக்கித் தடவ வேண்டும். சோப்புக்குப் பதில் கடலைமாவு, பயத்தமாவு போட்டால், இன்னும் நல்லது. இவற்றில் எண்ணெய்த்தன்மை இருப்பதால், முகத்தில் வறட்சி நீங்கி, பளபளப்பு கிடைக்கும்.

13. வாரம் ஒருமுறை நல்லெண்ணெய்க்குளியல் அவசியம். தலைக்கு சீயக்காய்த்தூள் உபயோகிப்பதும் வயோதிகத்தைத் தள்ளிப்போடும் செயல்தான். வறட்சி, பொடுகு போன்ற பிரச்னைகளால் முடி உதிராது. நரையும் ஏற்படாது.

14. செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து, கை, கால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறட்சி நீங்கி மிருதுவான சருமம் கிடைக்கும்.

15. உடல் ‘ரிலாக்ஸேஷனு’க்கு சவாசனம், மக்ராசனம் போன்ற யோகப்பயிற்சிகள் மிகச் சிறந்தவை. அலுவலகத்திலிருந்து வந்ததும், கை, கால்களைத் தளர்த்தி, சவாசனத்தில் படுத்து எழுந்தால், அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும். மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் தியானம் இளமையைத் தக்கவைக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.