Murmur Review: `Found Footage' முயற்சி ஓகே; ஆனால் இது ஒரு மர்மமான சினிமா அவஸ்தை!

ஜவ்வாது மலையில் ஒரு காடு. அதில் சூனியக்காரி ஆவி ஒன்று இருக்கிறதாம். அங்கேயே கன்னிமார் எனப்படும் நாட்டார் தெய்வங்களும் உலாவுகிறார்களாம். அதை ஆவணப்படுத்த நான்கு பேர் கொண்ட குழு ஒன்று செல்கிறது. அவர்களுக்கு உதவ, உள்ளூரைச் சேர்ந்த ஒரு சிறுமியும் உடன் செல்கிறார். இந்த ஐந்து நபர்களுக்கு என்ன ஆகிறது என்பதை `Found Footage’ பாணியில் சொல்லியிருப்பதே இந்த `மர்மர்’.

MURMUR

ஆரம்பத்தில் சற்றே கோபத்தைக் கிளறினாலும், இறுதிக் காட்சி நெருங்கும்போது மற்றவர்களை விட இவர் பரவாயில்லை என்ற பெயரைப் பெறுகிறார் ரிச்சி கபூர். அதேபோல், உள்ளூர் வழிகாட்டியாக வரும் யுவிகா ராஜேந்திரனின் நடிப்பிலும் பெரிதாகக் குறை ஏதுமில்லை. இதுதவிர, தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், அரியா செல்வராஜ் ஆகிய மூவரும் பயந்த மாதிரி நடிக்கிறார்கள். ஆனால், பார்க்கும் நமக்குப் பயம் வராமல் சிரிப்புதான் வருகிறது! ஒரு திகில் படத்தில் முக்கியமானது, பார்வையாளர்களைக் கதாபாத்திரங்களுடன் இணைத்து, அவர்களின் பயத்தைப் பகிர்ந்து கொள்ள வைப்பது. ஆனால் இங்கு அதற்கு மாறாக, ஒன்றுமே இல்லாமல் அவர்கள் ஓடுவதையும் கத்துவதையும் ‘லூப்’ மோடில் ஓடவிட்டிருக்கிறார்கள்.

ஆங்கிலப் படப் பாணியில் வித்தியாசமான வித்தையைக் காட்டலாம் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன். ஆனால், திரைக்கதை ஸ்ட்ராங்காக இருந்தால்தான், எந்த ஜானராக இருந்தாலும் அதைச் சுவாரஸ்யமாக்க முடியும். அதை மறந்து வெறும் கேமரா ஆட்டமும் பேய் சத்தமும் மட்டுமே மீண்டும் மீண்டும் திரையில்! ஜேசன் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு? கேமரா ஆடுவதுதான் இந்த ஜானரின் அடிப்படை என்றாலும், அதை வடிவமைப்பதில் ஒரு சிரத்தை இருந்தால்தான் பார்வையாளர்களைப் படத்துக்குள் கொண்டு வர முடியும்! கண்ணாபின்னா என்று அசையும் காட்சிகள், அயர்ச்சியையும் தலைவலியையும் ஒருசேர மண்டைக்குக் கொண்டு வந்து, தைலம் தேட வைக்கிறது.

MURMUR

படத்தில் நிறை என்று சொல்லக்கூடியது அதன் முயற்சி மட்டுமே. `Found Footage’ பாணியைத் தமிழில் கொண்டு வருவது ஒரு புதிய யோசனைதான். ஆனால், அதைச் சரியாகச் செயல்படுத்தாததால் அது வீணாகியிருக்கிறது. அதிலும் `Found Footage’ என்று சொல்லிவிட்டு, பக்காவாக கலர் கரெக்‌ஷன் எல்லாம் செய்யப்பட்ட காட்சிகள் திரையில் ஓடுவது போங்காட்டம்ங்கணா! அரை மணி நேரத்தில் முடித்திருக்க வேண்டிய கதையை, இரண்டு மணி நேரத்துக்கு மேல் இழுத்து, பேய் சுத்திச் சுத்தி ஓடுவது போல் சத்தம் மட்டும் போட்டு, டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்களின் தரத்தைச் சோதித்திருக்கிறார்கள்.

“ஐயோ, ஐயோ” என்று கத்திக்கொண்டு ஓடுவதையே மீண்டும் மீண்டும் பார்ப்பது, இது திகில் படமா அல்லது ‘ரன்னிங் இன் மேஸ்’ என்ற போகோ சேனல் விளையாட்டா என்ற குழப்பத்தைக் கொடுக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் இது பொறுமையைச் சோதிக்கும் ஒரு பரிசோதனையா என்ற கேள்வியே மிஞ்சுகிறது. படம் முடியும் கடைசி பத்து நிமிடங்கள் சற்றே சுவாரஸ்யம் தருகின்றன. ஒருவேளை OTT தளத்தில் வந்தால், “x2” என்று வேகமாக முன்னோக்கிச் செலுத்தி, அந்த இடத்துக்கு வந்துவிடலாம். ஆனால், தியேட்டரில் என்ன செய்வது? பயமோ, அழுகையோ, சிரிப்போ எந்தவித உணர்வையும் கடத்தாமல், படம் முடிந்தவுடன் தியேட்டரை விட்டு வெளியேறும் ‘சுதந்திர’ உணர்வு மட்டுமே மிஞ்சுகிறது.

MURMUR

மொத்தத்தில், திரைக்கதையில் சுவாரஸ்யமின்மை, பலவீனமான திகில் காட்சிகள், நீண்ட இழுவையான காட்சிக் கோர்வை என, பயமுறுத்தாத இந்த `மர்மர்’, ஒரு மர்மமான சினிமா அவஸ்தையே!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.