உ.பி.யில் பிரபலமாகும் மயான ஹோலி: நாகா துறவிகளுடன் பொது மக்கள் 10,000 பேர் பங்கேற்பு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் வாராணசியில் துறவிகளால் கொண்டாப்படும் மயான ஹோலி பிரபலமாகி வருகிறது. மணிகன்கா காட்டில் நடைபெற்ற 2-வது நாள் நிகழ்ச்சியில் அகோரி, நாகா துறவிகளுடன் சுமார் 10,000 பொது மக்களும் இணைந்து ஹோலி கொண்டாடினர்.

வட மாநிலங்களில் மார்ச் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ள ஹோலி பண்டிகை மிகவும் முக்கியமானது. இது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையாக முன்கூட்டியே துவக்கப்படுகிறது. இந்த வகையில், திங்கள்கிழமை வந்த ரங்பர்னி ஏகாதேசி தினத்தன்று உத்தரப் பிரதேசத்தில் ஹோலி துவங்கியது. இதற்கு அந்த நாளில்தான் இங்குள்ள பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பிக்கை உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இதற்கும் இரண்டு நாள் முன்னதாக மதுராவில் லாட்மார் (தடியடி) ஹோலி துவங்கி விட்டது. இதை மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்திருந்தார். ரங்பர்கி ஏகாதேசியில், வாராணசியின் இரு பெரும் மயானங்களில் துறவிகளால் ஹோலி கொண்டாடும் வழக்கம் துவங்கி விட்டது. இந்த வகை ஹோலி நாகா மற்றும் அகோரி துறவிகளால் புதிதாகக் கொண்டாடத் துவங்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’இணையத்திடம் வாராணசி ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் கூறும்போது, “ஐதீகத்தில் இடம்பெறாத இந்த மயான ஹோலி சுமார் பத்து வருடங்களாகக் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களுடன் வெளிநாட்டவர்களும் இதை வேடிக்கை பார்க்க திரளாக வருகின்றனர். இதனால், மயான ஹோலிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்த மயான ஹோலி திங்கள்கிழமை, கங்கை கரையின் பிரபலமான ஹரிச்சந்திரா காட் மயானத்தில் கொண்டாடப்பட்டது. இதன் மறுநாளான செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு இரண்டாவது நாளும் மயான ஹோலி, வாராணசியில் மட்டும் கொண்டாடப்பட்டது.

இந்த மயான ஹோலியில் நாகா மற்றும் அகோரி துறவிகள் மட்டுமே கலந்து கொள்ளத் துவங்கினர். ஆனால், இதை வேடிக்கை பார்க்க மட்டும் வரத் துவங்கிய பொதுமக்கள், சில ஆண்டுகளாக அகோரி, நாகா துறவிகளுடன் இணைந்து ஹோலி கொண்டாடத் துவங்கியுள்ளனர்.

இந்த வகையில், மயான ஹோலி இரண்டாவது நாளில் மேலும் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு இடதுபுறம் மணிக்கன்கா காட்டும், வலதுபுறம் ஹரிச்சந்திரா காட்டும் கங்கை கரையில் அமைந்துள்ளன.

மயான ஹோலியின் முதல் நாளை போல் செவ்வாய்க்கிழமையும் மணிகன்கா காட்டில் மயான ஹோலி கொண்டாடப்பட்டது. இதில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து சிறிய, பெரிய உடுக்கைகளை அடித்தபடி, ஊர்வலமாக மணிகன்கா காட்டில் நாகா, அகோரி துறவிகள் நுழைந்தனர்.

பிறகு மயானதில் எரிந்த உடல்களின் சாம்பல்களை ஒருவர் மீது மற்றவர் தடவியும், தூவியும் ஹோலி விளையாடினர். இவர்களுடன் மயான சாம்பலின் ஹோலி விளையாட்டில் பொதுமக்களும் கலந்துகொண்டனர். இவர்களில் சில அகோரி துறவிகள், எரிந்தும் அணையாமல் நெருப்புடன் இருந்த சாம்பலையும் தைரியமாகத் தூவி ஹோலி கொண்டாடினர்.

வழக்கமாகவே இந்த இரண்டு மயானங்களுக்கு வாராணாசியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து வந்தபடி இருப்பது வழக்கம். இந்த உடல்கள் மயான ஹோலியை முன்னிட்டு சுமார் 2 மணி நேரம் வேறு வழியின்றி மணிக்கன்கா மற்றும் ஹரிச்சந்திரா மயானங்களின் முன்பு காத்திருக்க வேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.