எஸ்சி, எஸ்டி, ஓபிசி கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பை உயர்த்த கனிமொழி எம்.பி கோரிக்கை

புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சரவரம்பை அதிகரிக்க கோரப்பட்டுள்ளது. மக்களவையில் கனிமொழி எம்.பி இதற்காக அவசர கோரிக்கை விடுத்தார். பொது அவசரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை மக்களவையில் எழுப்ப விதி எண் 377 அனுமதிக்கிறது. இதன் அடிப்படையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி புதன்கிழமை ஒரு கோரிக்கை எழுப்பினார்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான இந்த கோரிக்கை மீது தூத்துக்குடி தொகுதி எம்.பியான கனிமொழி பேசியதாவது: பட்டியல் சமூகம், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன.

இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசரத் தேவையை இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். தற்போது, இந்த மாணவர்களுக்கான மெட்ரிக்கிற்கு முந்தைய மற்றும் பிந்தைய உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பு ரூ.2.5 லட்சம்.

அதேநேரம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கான தேசிய ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் மற்றும் உயர்தர கல்வித் திட்டம் போன்ற ஸ்காலர்ஷிப் திட்டங்களுக்கு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர் கல்வி கணக்கெடுப்பின்படி , பட்டியல் சமூக மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 23.1 சதவிகிதம். பழங்குடி மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 18.9 சதவிகிதம்.

இவை தேசிய சராசரியான 27.3 சதவிகிதத்தை விட மிகவும் குறைவு. இவ்வாறான வேறுபாடுகள் , பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு, உயர் கல்வியில் சமமான வாய்ப்புகள் இல்லாததை காட்டுகின்றன.

இதை, பாதிக்கப்படும் மாணவர்களுக்கான சமவாய்ப்புகளை உறுதி செய்வதற்கான தலையீடுகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாடு அரசு கடந்த டிசம்பர் 2024-ல் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியது.

அதில், மத்திய அரசு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கான ப்ரீ-மெட்ரிக் மற்றும் போஸ்ட்-மெட்ரிக் உதவித் தொகைகளுக்கான வருமான உச்ச வரம்பை உயர்த்தக் கோரியது.

இதை, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின் மாணவர்களைப் போலவே 8 லட்சமாக உயர்த்த வேண்டியது. இதன்மூலம், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்விச் சேர்க்கையை எளிதாக்கவும் வலியுறுத்தியது.

எனவே, தமிழ்நாடு அரசின் இந்த முன்மொழிவின் மீது மத்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.