இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயில் கடத்தல் சம்பவத்தில் தீவிரவாதிகள் 27 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் ராணுவத்தினர், 155 பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று முன்தினம் காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.
அப்போது பலுச் விடுதலை படையை (பிஎல்ஏ) சேர்ந்த தீவிரவாதிகள், ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறைபிடித்தனர். ரயிலின் குறிப்பிட்ட பெட்டிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்களும் பயணம் செய்தனர். அப்போது அவர்களுக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 30 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இந்த சம்பவம் உலக அளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ரயிலில் உள்ள பிணைக் கைதிகளை காப்பாற்றுவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் களத்தில் இறங்கியுள்ளனர்.
நேற்று 2-வது நாளாக நடைபெற்ற மீட்புப் பணியில் இதுவரை 155 பொதுமக்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் தொடங்கிய துப்பாக்கிச்சண்டை நேற்று வரை நீடித்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் இடைவிடாத துப்பாக்கிச் சண்டையை தொடர்ந்தனர். இதனால் தீவிரவாதிகளுக்கு அதிக அளவில் சேதம் ஏற்பட்டது. இன்னும் ரயிலில் தீவிரவாதிகள் எத்தனை பேர் பதுங்கியுள்ளனர் என்பது தெரியவில்லை.
இதையடுத்து ரயிலில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் எஞ்சிய பயணிகளை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது. தீவிரவாதிகளை வீழ்த்தும் பணி தொடரும் என்றும் அனைத்து பிணைக் கைதிகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட 155 பயணிகளும் மற்றொரு ரயில் மூலம் பலுசிஸ்தான் மாகாணத்தின் கச்சி மாவட்டத்தில் உள்ள மாக் நகருக்கு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 155 பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை பயணிகள் ரயிலில் பிணைக் கைதிகளாக இருக்கின்றனர் என்ற சரியான தகவல் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
ஏனெனில் ரயிலில் இருந்து சில பயணிகள் இறங்கி இருட்டு நேரத்திலும் மலைகளுக்கு இடையே ஓடி ஒளிந்தனர் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் 35 பயணிகளை தீவிரவாதிகள் ரயிலில் இருந்து வேறொரு இடத்துக்குக் கடத்திச் சென்றதாகவும், ஆனால் அவர்கள் உயிருடன் இருப்பதாகவும் உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வெளியே வந்த பயணி ஒருவர் கூறும்போது, “ரயிலை தீவிரவாதிகள் சிறைபிடித்ததும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனியே பிரித்தனர். தீவிரவாதிகளுக்கு பயந்து ரயில் சீட்களுக்கு கீழே பதுங்கியவர்களையும் அவர்கள் விடவில்லை. நான் இதய நோயாளி என்பதால் என்னையும், எனது குடும்பத்தாரையும் அவர்கள் விட்டு விட்டனர்” என்றார்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரயில் இன்ஜின் பைலட் (டிரைவர்), போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 30 பேர் இறந்துள்ளனர்.
பாகிஸ்தான் 4 துண்டுகளாக சிதறும்: இந்நிலையில் பாகிஸ்தான் 4 துண்டுகளாக சிதறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று ஜம்மு-காஷ்மீர் போலீஸ் முன்னாள் டிஜிபி எஸ்.பி. வைத் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, “பலுசிஸ்தான் மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து பாகிஸ்தான் ராணுவமும், அரசும் இழந்துவிட்டது. அங்கு என்ன நடந்தாலும் அவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, இதுபோன்ற விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. பாகிஸ்தான் நாடு 4 துண்டுகளாக சிதறும் இறுதி நிலைக்கு வந்துவிட்டது.
பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள 6 முதல் 7 மாவட்டங்கள் முழுவதும் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கியுள்ளது. அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம்” என்றார்.
பிரதமர் கண்டனம்: இதனிடையே ரமலான் நோன்பு மாதத்தில் நடந்த இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் நாட்டிலிருந்து தீவிரவாதம் என்ற அரக்கனை முற்றிலுமாக ஒழிக்கும் வரை அதற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடர்வோம். பாகிஸ்தானில் அமைதியின்மை மற்றும் குழப்பத்தை பரப்பும் ஒவ்வொரு சதியையும் நாங்கள் முறியடிப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.