கொட்டும் மழைக்கு இடையே… பிரதமர் மோடிக்கு விருது வழங்கும் விழாவில் குவிந்த மக்கள்

போர்ட் லூயிஸ்,

மொரீசியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடி அந்நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மொரீசியசுக்கு நேற்று புறப்பட்டார். தீவு நாடான மொரீசியசை சென்றடைந்ததும், பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் வருகையை சிறப்பிக்கும் வகையில் பேசிய அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், மொரீசியஸை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இந்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

நீங்கள் எப்போதெல்லாம் எங்களுடைய நாட்டுக்கு வருகிறீர்களோ, அப்போது எங்களுடைய நாட்டை நன்றாக வளப்படுத்துகிறீர்கள் என பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். மொரீசியஸ் நாட்டில் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் நீங்கள் ஆற்றிய பங்கு உண்மையில் பெரிதும் பாராட்டத்தக்கது என்றும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன் என்ற மொரீசியஸ் நாட்டின் உயரிய விருது இன்று வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.

இந்த விருது பெற்ற பின்பு, அவர் திரளாக கூடியிருந்த கூட்டத்தினரிடையே பேசும்போது, மொரீசியஸின் உயரிய தேசிய விருது வழங்கியதற்காக நான் உளப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது எனக்கான கவுரவம் மட்டும் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கவுரவம்.

இந்த விருது, இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலாசார மற்றும் வரலாற்று பிணைப்புகளுக்கான அடையாளம் ஆகும்.

இது, மண்டல அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்கான நம்முடைய உள்ளார்ந்த ஈடுபாட்டிற்கான அங்கீகாரம். இந்த விருது, உலகளாவிய தெற்கு பகுதிக்கான பகிரப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் நோக்கங்களுக்கான அடையாளம் ஆகும் என பேசியுள்ளார்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது, மழை கொட்டியது. ஆனால், மழையையும் பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி விருது பெறும் நிகழ்வை காண்பதற்காக மக்கள் கூடியிருந்தனர். மொரீசியஸ் நாட்டில் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத்தினரை சந்தித்து அவர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். அவருடைய சுற்றுப்பயணம் நிறைவடைந்ததும் சொந்த நாட்டுக்கு திரும்பினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.