நாகர்கோவில்: தமிழகத்தில் உள்ள ஒரே அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியான குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், மருத்துவ கல்லூரியின் அங்கீகாரமும் பறிபோவதற்கான ஆபத்து உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறில் முதலாவதாக தலைமை அரசு மருத்துவமனை இயங்கி வந்தது. பின்னர் குமரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் இயங்கியதை தொடர்ந்து, கோட்டாறில் இயங்கிய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் அரசு ஆயுர்வேத மருத்துவமனை துவங்கப்பட்டது. பின்னர் இங்கு புதிய கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள ஒரே அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியென பெருமை பெற்ற இதை, கடந்த 2009-ம் ஆண்டு தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வராக இருந்தபோது திறந்து வைத்தார். கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
கேரள பாரம்பரிய வைத்திய முறைப்படி பல நோய்களுக்கும் பக்க விளைவு இல்லாத சிகிச்சை அளிப்பதால் இங்கு தினமும் வெளிநோயாளிகளும், உள்நோயாளிகள் அதிகமானோர் வருகை புரிகின்றனர். ஆண்டுதோறும் 60 மாணவ, மாணவியர்கள் ஆயுர்வேத மருத்துவர் படிப்பிற்கு சேர்க்கப்படுகின்றனர். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள மாணவ, மாணவியர்கள் இங்கு பயின்று வருகின்றனர். மருத்துவ கல்லூரியில் ஆண்டுதோறும் 5ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் என 360 மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் உள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளிக்க இந்த மருத்துவ கல்லூரி மாணவர்களும் பக்கபலமாக உள்ளனர். படிப்பிற்கான பயிற்சி பெறுவதுடன் நோயாளிகளையும் அவர்கள் சிறப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோட்டாறு அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் பற்றாக்குறையே ஆகும். முறைப்படி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கு குறைந்தது 27 மருத்துவ ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஒரு மருத்துவ ஆசிரியர் சென்னை அறிஞர் அண்ணா மருத்துவமனைக்கு பணியிட மாறுதலில் சென்றார். அதன் பின்னர் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
தற்போது 26 ஆசிரியர்களே உள்ளனர். ஆயுர்வேத அரசு மருத்துவ கல்லூரி தமிழகத்தில் வேறு இடத்தில் இல்லாததால் வேறு ஆசிரியர்களும் நியமிக்கப்படாமல் உள்ளது. இச்சூழலில் மத்திய அரசின் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் (என்சிஐஎஸ்எம்) மருத்துவ மாணவர்களுக்கான நடப்பாண்டு சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதற்கான ஆய்வை துவங்கியுள்ளது.
இந்த ஆணையர் குழு விரைவில் குமரி மாவட்டம் வருகை தந்து கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஆய்வு செய்யவுள்ளது. அப்போது மருத்துவ ஆசிரியர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி மாணவர் சேர்க்கைக்கான அனுமதி மறுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மாணவர் சேர்க்கை நடைபெறாமல் போனால் தமிழகத்தில் உள்ள ஒரே அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரமும் பறிபோகும் ஆபத்து உள்ளது.
இதுகுறித்து கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூறுகையில், ”வேறு மருத்துவ கல்லூரியையோ, அல்லது பிற பணிகள் போன்றோ ஒரு இடத்தில் பணியாற்றுவோரை இங்கு நியமனம் செய்ய வாய்ப்பில்லாத சூழல் உள்ளது. தமிழகத்தில் ஒரே அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி இது மட்டும் தான் என்பதால் தமிழகத்தில் வேறு மாவட்டத்தில் ஆயுர்வேத மருத்துவ ஆசிரியர்கள் இல்லை.
எனவே இங்கிருந்து மாற்றப்பட்ட மருத்துவ ஆசிரியர் சீனியை மீண்டும் கோட்டாறு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்வதே ஒரே தீர்வாக உள்ளது. இல்லையென்றால் மாணவர் சேர்க்கை அனுமதி மறுக்கப்படுவதுடன், ஆயுர்வேத மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரமும் இல்லாமல் போயும் சூழல் உள்ளது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.