‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘ஜடா’, ‘குட் நைட்’, போன்ற படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றிய ஶ்ரீகாந்த் உயிரிழந்திருக்கிறார்.
பாரி இளவழகன் இயக்கி நடித்திருந்தத் திரைப்படம் ‘ஜமா’. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இந்தத் திரைப்படம் வெளியானது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஶ்ரீகாந்த் தான் இந்தப் படத்திற்கு கலை இயக்குநராகப் பணியாற்றி இருந்தார். இந்நிலையில் நேற்று கலை இயக்குநர் ஶ்ரீகாந்த் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.

அவரின் திடீர் மறைவு திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அவருடன் இணைந்து பணியாற்றிய `ஜமா’ திரைப்படத்தின் இயக்குநர் பாரி இளவழகனைத் தொடர்புகொண்டு பேசினோம். “அவருக்கு மூன்றாவது முறையாக மாரடைப்பு வந்திருக்கிறது. இரண்டு நாள்களாக ICU-வில் வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு அவருக்கு மாரடைப்புப் பிரச்னை இருக்கிறது என்று எங்களிடம் சொன்னதில்லை.
எங்களுக்கும் இதுப்பற்றி தெரியாது. ஆனால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய நபர்தான். எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. ரொம்ப அமைதியாக இருப்பார். அதிகமாகப் பேசமாட்டார். மிகவும் சின்சியராக வேலை செய்யக்கூடியவர். உதவி கலை இயக்குநர்கள் இருந்தாலும் அவரே அந்த வேலையைச் சிரமம் பார்க்காமல் செய்வார்.

‘ஜமா’ படத்திற்கு முழு ஆன்மாவையும் கொடுத்து வேலை செய்தார். எப்படியாவது தேசிய விருது கிடைத்துவிடும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையும் இருந்தது. அவருடைய சொந்த ஊர் மேட்டூர் அவரது உடல் அங்கு எடுத்துசெல்லப்பட்டிருக்கிறது. என்னுடைய இரங்கலை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…