`நாங்க ஆட்சிக்கு வந்ததும் முஸ்லிம் MLA-க்களை சட்டசபையிலிருந்து…' – பாஜக சுவேந்து அதிகாரி சர்ச்சை

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 2026-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான அரசியல் வேலைப்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன. இதில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கத்தில், தொடர்ச்சியாக பாஜக எம்.எல்.ஏ-க்கள் ஆளுங்கட்சிக்கு தாவிவருகின்றனர். 2021 தேர்தலில் 77 வென்ற இடங்களை வென்ற பா.ஜ.க-விலிருந்து, தற்போது கடைசியாக வெளியேறிய தபசி மோண்டல் வரை மொத்தம் 12 எம்.எல்.ஏ-க்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருக்கின்றனர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மறுபக்கம், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட 4 பாஜக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் சபாநாயகர் முன்பு அமளியில் ஈடுபட்டதால் பிப்ரவரி 17 முதல் பட்ஜெட் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில், 2026-ல் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் எம்.எல்.ஏ-க்களை சட்டமன்றத்திலிருந்து தூக்கியெறிவோம் என சுவேந்து அதிகாரி பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சட்டமன்றத்துக்கு வெளியே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, “முஸ்லீம் லீக்கின் அடுத்த வெர்ஷன் போல வகுப்புவாத நிர்வாகமாக மம்தா அரசு நடந்துகொள்கிறது. இம்முறை, வங்காள மக்கள் அவர்களை (திரிணாமுல் காங்கிரஸ்) வேரோடு பிடுங்கி எறிவார்கள். 2026-ல் ஆட்சிக்கு வந்தால் திரிணாமுல் முஸ்லிம் எம்.எல்.ஏ-க்களை சட்டமன்றத்திலிருந்து சாலைக்கு வெளியே தூக்கியெறிவோம்.” என்று கூறினார். சுவேந்து அதிகாரியின் இத்தகைய பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.

அதேசமயம், ஆளுங்கட்சியினர் இதனை வெறுப்புப் பேச்சு என்று பாஜக மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இந்த விவகாரத்தில் நேற்று செய்தியாளர்களிடத்தில் பேசிய திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், “இது மிகவும் ஆட்சேபனைக்குரிய கருத்து. மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மதத்தின் பெயரால் பாகுபாடு காட்ட முடியாது. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை தூக்கியெறிவோம் என்ற சொல்ல முடியாது. இந்த மனநிலை சரியானது இல்லை. நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ விவாதங்கள் இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களைக் குறிவைத்து மதத்தைக் கொச்சைப்படுத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இது ஆபத்தானது, இது கிரிமினல் குற்றம்.” என்று கூறினார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.