இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மகாணத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 190 பிணைக் கைதிகளை பாதுகாப்புப் படையினர் விடுவித்துள்ள நிலையில், இன்னும் குறைந்தது 250 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 9 பெட்டிகளுடனும் சுமார் 500 பயணிகளுடனும் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸை, போலான் மாவட்டத்தில் பலூச் விடுதலை ராணுவம் (Baloch Liberation Army-BLA) எனும் தீவிரவாத அமைப்பு நேற்று காலை கடத்தியது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு பாதுகாப்புப் படையினர் அதிக எண்ணிக்கையில் அனுப்பப்பட்டனர். பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தீவிரவாதிகள் 30 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 190 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இன்னமும் அவர்கள் பிடியில் சுமார் 250 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட உள்ளாடைகளை அணிந்த தற்கொலைப் படை போராளிகள் பணயக்கைதிகளுடன் ரயிலுக்குள் இருப்பதால், பாதுகாப்புப் படையினர் முழு அளவிலான சண்டைகளைத் தவிர்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “ரயில் கடத்தல் தொடர்பான அறிக்கைகளை நாங்கள் கவனித்தோம். இந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், ஒற்றுமை மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பேணுவதிலும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் பாகிஸ்தானுக்கு நாங்கள் தொடர்ந்து உறுதியாக ஆதரவளிப்போம். பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தானை விடுவிக்க பிஎல்ஏ உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த பிறகு, அது பலுசிஸ்தானை தன்னுடன் இணைத்துக்கொண்டது. அது முதல் பலுசிஸ்தான் விடுதலைக்காக பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. எண்ணெய் மற்றும் கனிம வளம் மிக்க பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. எனினும், இந்த மாகாணம் குறைந்த மக்கள் தொகையை கொண்டுள்ளது. பாகிஸ்தான் மத்திய அரசு, பலுசிஸ்தானுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், தங்கள் மாகாணம் சுரண்டப்படுவதாகவும் பலுசிஸ்தான் அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.