“பாசிச பாஜகவுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்” – மு.க.ஸ்டாலின் முழக்கம்

திருவள்ளூர்: “பாஜகவின் தொகுதி மறுசீரமைப்பு பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம். பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்” என்று திமுக சார்பில் திருவள்ளூரில் நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திருவள்ளூரில் திமுக சார்பில், மத்திய பாஜக அரசுக்கு எதிரான ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ கண்டனப் பொதுக் கூட்டம் இன்று (மார்ச் 12) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “ஒடிசா மாநிலத்தில் தேர்தல் நடந்தபோது, மரியாதைக்குரிய நவீன் பட்நாயக்கின் செயலாளராகத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தார் என்பதற்காக, பிரதமர் மோடியும் – உள்துறை அமைச்சரும் தமிழகத்தை எவ்வாறெல்லாம் கொச்சைப்படுத்தினார்கள்? ஜெகந்நாதர் கோயில் கருவூலச் சாவியைத் தமிழகத்துக்கு திருடிச் சென்றுவிட்டார்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கருவூலச் சாவி தொடர்பான விசாரணை அறிக்கையைப் பொதுவில் வெளியிடுவோம் என்று பேசினார்களா? இல்லையா?

ஜெகந்நாதர் கோயில் கருவூலச் சாவிக்கும், தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்? பிரதமரும் – உள்துறை அமைச்சரும் செய்தது எவ்வளவு பெரிய அவதூறு? அங்கு ஆட்சி மாற்றம் நடந்து பாஜக ஆட்சிக்கு வந்து 5 மாசம் ஆகிவிட்டது, கருவூலச் சாவி எங்கே என்று ஒடிசா எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார். தமிழர்களைத் திருடர்கள் என்று சொன்னதை வாபஸ் பெறுங்கள் என்று அந்த எம்.பி. சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு அவையில் வாய்மூடி மவுனம் சாதித்திருக்கிறார்கள். இதுதான் அநாகரிகம்.

அநாகரிகம் பற்றிப் பேசும் தர்மேந்திர பிரதான் அவர்களே, எது நாகரிகம்? என்று உங்களால் சொல்ல முடியுமா? எங்கள் மாநிலத்தில் இருந்து வரியை வசூல் செய்துவிட்டு, எங்களையே பட்டினி போடுவதுதான் நாகரிகமா? “தமிழ் பிடிக்கும், தமிழில் பேச முடியவில்லையே” என்று சொல்லிக் கொண்டே, தமிழுக்கு நிதி ஒதுக்காமல் சமஸ்கிருதத்துக்கு நிதி ஒதுக்குவதுதான் நாகரிகமா? தாய்மொழியை வலியுறுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டே அதைச் செய்யாமல் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதுதான் நாகரிகமா?

குஜராத்தில் இயற்கைப் பேரிடர் வந்தால், அன்று மாலையே 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதும், தமிழகத்தில் பேரிடர் வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும், நாங்கள் கேட்டதில் ஒரு விழுக்காடு நிதிகூட ஒதுக்காமல் இருப்பதுதான் நாகரிகமா? ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை மட்டும் அறிவித்துவிட்டு, ஏழு ஆண்டுகாலமாக அதைக் கட்டாமல் ஏமாத்துவதுதான் நாகரிகமா? நாகரிகத்தைப் பற்றி யார் பேசுவது? அநாகரிகத்தின் அடையாளமே நீங்கள்தான். அநாகரிகத்தையே அராஜகமாகப் பயன்படுத்துவது நீங்கள்தான். இந்தி மொழியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நிதி தர மாட்டோம் என்று சொல்வதைவிட அராஜகம் இருக்க முடியுமா?

தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்தின் பிரச்சினை மட்டுமல்ல, தென் மாநிலங்களின் பிரச்சினை என்பதால், இன்னும் சில மாநிலங்களும் பாதிக்கப்படும் என்று அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். தென் மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத பாஜக, வடமாநிலங்களில் பெறும் வெற்றியை வைத்தே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறது. அதுதான் சதி. தங்களுக்கு செல்வாக்கான மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு, தங்களை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். இதைத் திமுக தடுத்து நிறுத்தும். தென் மாநிலக் கட்சிகள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டு தடுப்போம். பாஜகவின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம். பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்.

தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கப்படவுள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்த்து, கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க இருக்கிறோம். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் இருக்கும் 29 கட்சிகளுக்கு நான் கடிதம் அனுப்பி இருக்கிறேன். பிற மாநில முதல்வர்களுடன் நானே நேரடியாக இன்று காலை முதல் தொலைபேசியில் பேசி வருகிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்தக் கருத்தை எடுத்துச் சொல்கிறார்கள். இதன் தொடர்ச்சியாகச் சென்னையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துக் கொள்ளும் கூட்டத்தை மார்ச் 22-ம் தேதி நடத்த இருக்கிறோம்.

நாடு இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது? ஜிடிபி எனப்படும் இந்திய நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை என்னவாக வைத்திருக்கிறீர்கள்? கடந்த அக்டோபர் – டிசம்பர் ஆகிய மூன்றாவது காலாண்டில் 6.8 விழுக்காடாக வளரும் என்று சொன்னார்கள். ஆனால், 6.2 விழுக்காடுதான் வந்திருக்கிறது. இதுதான் உங்களின் வளர்ச்சி இந்தியாவா? அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து சரிந்து படுபாதாளத்துக்குச் செல்கிறது. 2014-ம் ஆண்டு நீங்கள் ஆட்சிக்கு வரும்போது அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 58 ரூபாய் 47 பைசாவாக இருந்தது. இப்போது 2025-ம் ஆண்டு 87 ரூபாய் 99 பைசாவாக ஆகிவிட்டது. இதுதான் இந்தியாவுக்கான வளர்ச்சியா?

அமெரிக்கப் பொருள்கள் மேல் விதிக்கும் கூடுதல் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டார்கள் என்று, அந்த நாட்டின் அதிபர் வெளிப்படையாகப் பேட்டி அளித்திருக்கிறார். இது அவமானம் இல்லையா? இந்தியாவுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இதுதானா? இந்தியாவின் மதிப்பை உயர்த்த நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் பற்றி எரிகிறது. 250 பேர் பலியாகி இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்புகூட வன்முறை நடந்திருக்கிறது. இதைத் தடுக்க சிறு துரும்பளவு கூட மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட கைது செய்யப்பட மாட்டார் என்று சொன்னவர் மோடி. அவருடைய பத்தாண்டு கால ஆட்சியில் 3,000 பேர் கைது செய்யப்பட்டார்கள். கடந்த ஆண்டு மட்டும் 550 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு மாதத்தில் 130 பேர் கைது செய்யப்பட்டார்கள். சிறிய நாடான இலங்கை கூட உங்களை மதிக்கலையே, இதுதான் உங்களுடைய பரிதாபங்கள். அதனால்தான் அதல பாதாளத்துக்கு இந்தியா இறங்கிக் கொண்டு இருக்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.