பிரதமர் நரேந்திர மோடி நேற்று மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸ் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போர்ட் லூயிஸில் இன்று நடைபெறும் மொரீஷியஸ் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் மொரீஷியஸ் தீவு நாடு அமைந்துள்ளது. இது ஆப்பிரிக்காவின் சிங்கப்பூர் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 1715-ம் ஆண்டில் மொரீஷியஸை, பிரான்ஸ் ஆக்கிரமித்தது. கடந்த 1803 மற்றும் 1815-ம் ஆண்டு நடைபெற்ற போரில் பிரான்ஸிடம் இருந்து மொரீஷியஸை, பிரிட்டன் கைப்பற்றியது.
கடந்த 1834 முதல் 1924-ம் ஆண்டு வரை இந்தியாவின் பிஹார், உத்தர பிரதேசம், தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கப்பல்கள் மூலம் மொரீஷியஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த 1968-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி பிரிட்டனிடம் இருந்து மொரீஷியஸ் விடுதலை பெற்றது. இந்த நாள், தேசிய தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
70% இந்திய வம்சாவளியினர்: தற்போது மொரீஷியஸ் நாட்டில் சுமார் 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் 70 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். இதில் 12 சதவீதம் பேர் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள் ஆவர். மொரீஷியஸ் ரூபாய் நோட்டில் ஆங்கிலம், இந்தி, தமிழில் எழுத்துகள் அச்சிடப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் மொரீஷியஸின் 57-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்த நாட்டுக்கு சென்றார். தலைநகர் போர்ட் லூயிஸ் விமான நிலையத்தில் மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் நேரில் வந்து பிரதமர் மோடியை ஆரத் தழுவி வரவேற்றார்.
பிஹாரை பூர்விகமாகக் கொண்ட மொரீஷியஸ் பெண்கள், போஜ்பூரி மொழியில் கீத் கவாய் பாடலை பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்னர் ஷிவ்சாகர் ராம்கூலம் தாவரவியல் பூங்காவில் இரு நாடுகளின் பிரதமர்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
தலைநகர் போர்ட் லூயிஸில் இன்று நடைபெறும் மொரீஷியஸ் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படை வீரர்களின் சாகசங்களும் இடம்பெற உள்ளன.
இந்திய அரசின் நிதியுதவியுடன் மொரீஷியஸ் நாட்டில் கால்பந்து மைதானங்கள் உள்ளிட்ட 20 திட்டங்கள் நிறைவேற்ற்பட்டு உள்ளன. இந்த திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
அகலேகா தீவில் இந்திய ராணுவ தளம்: இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா அதிதீவிர முயற்சிகளை செய்து வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள டிஜிபோத்தியில் சீனா தனது ராணுவ தளத்தை கட்டமைத்து உள்ளது.
சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் மொரீஷியஸின் அகலேகா தீவில் இந்திய அரசு ரகசியமாக ராணுவ தளத்தை அமைத்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் ராணுவ தளத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2023-ம் ஆண்டில் அகலேகா தீவு ராணுவ தளம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தீவில் போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான ஓடு பாதை, போர்க்கப்பல்களை நிறுத்துவதற்கான தளம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து இந்திய பெருங்கடல் பகுதிகளை முழுமையாக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
அகலேகா தீவு ராணுவ தளம் குறித்து இந்திய அரசோ, மொரீஷியஸ் அரசோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இது இந்தியாவின் ரகசிய ராணுவ தளமாக வர்ணிக்கப்படுகிறது.