சண்டிகர்: ஹரியானாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், மொத்தம் உள்ள 10-ல் 9 மாநகராட்சிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானாவில் பரிதாபாத், ஹிசார், ரோத்தக், கர்னால், யமுனா நகர், குருகிராம் மற்றும் மானேசர் ஆகிய 7 மாநகராட்சிகளுக்கு கடந்த 2-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பானிப்பட் மாநகராட்சி தேர்தல் மற்றும் அம்பாலா மற்றும் சோனிபட் ஆகிய 2 மாநகராட்சிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.
அதே நாளில் 21 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் வெறும் 41% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. இந்தத் தேர்தலில் 26 வார்டுகளின் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 10-ல் 9 மாநகராட்சிகளில் பாஜக வெற்றி பெற்றது. 10-வது மாநகராட்சியான மானேசரிலும் பாஜகவின் அதிருப்தி வேட்பாளர் டாக்டர் இந்திரஜித் யாதவ் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடாவின் கோட்டையாக கருதப்பட்ட குருகிராம் மற்றும் ரோத்தக் மாநகராட்சிகளில் கூட காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை. இதில் ரோத்தக் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சூரஜ்மால் கிலோயைவிட (45,000) பாஜகவின் ராம் அவதார் சுமார் 55 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி செய்தியாளர்களிடம் கூறும்போது, “மூன்று இன்ஜின் அரசுக்கு மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘வளர்ந்த இந்தியா’ என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டத்தை நிறவேற்ற மூன்று இன்ஜின் அரசு முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.