Doctor Vikatan: சோஷியல் மீடியாவை பார்த்து எடை குறைத்த மகள்: ஆரோக்கியமானதா, அனுமதிக்கலாமா?

Doctor Vikatan: என்னுடைய 13 வயது மகள்  மிகவும் அதிக உடல் பருமனுடன் இருந்தாள்.  கடந்த சில நாள்களாக திடீரென சோஷியல் மீடியாவை பார்த்து அவளாகவே ஏதோ டயட்டை பின்பற்றுகிறாள். அந்த டயட்டை பின்பற்ற ஆரம்பித்த பிறகு உடல் எடை வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதை அப்படியே அனுமதிக்கலாமா…. எடை குறைந்தால் ஆரோக்கியமானதுதானே…?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

டயட் என்பது நாமாக முடிவுசெய்தோ, மற்றவர்கள் சொல்வதை, பின்பற்றுவதைப் பார்த்தோ செய்வது என்பது சரியான விஷயமே இல்லை. குறிப்பாக, சோஷியல் மீடியாவை பார்த்து அதன் தாக்கத்தில்  மற்றவர்கள் சொல்வதைப் பின்பற்றுவது நிச்சயம் தவறானது. 

உங்கள் டீன் ஏஜ் மகள்  இந்த வயதிலேயே ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்குப் பழகுவது நல்ல விஷயம்தான். ஆனால், டயட் விஷயத்தில் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகர் என நிபுணரின் வழிகாட்டுதலோடு பின்பற்றுவதுதான் சரியானது என்பதை எடுத்துச் சொல்லுங்கள். முறையற்ற டயட், ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தலாம். வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். சோஷியல் மீடியாவில் தகவல்கள், அனுபவங்கள் பகிர்கிறவர்கள் பெரும்பாலும் நிபுணர்களோ, முறைப்படி அந்தத் துறை குறித்துப் படித்தவர்களோ இல்லை.  எனவே, அவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றக் கூடாது.

உங்கள் வீட்டில் குழந்தை திடீரென சரியாகச் சாப்பிடுவதில்லை, எடையும் குறைகிறது என்றால், உடனே அதைக் கண்காணியுங்கள். மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகள், எடையைக் குறைத்த பிறகும், சாப்பிட பயப்படுவார்கள். எதைச் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்குமோ என பயப்படுவார்கள்.

டீன் ஏஜ் குழந்தைகளிடம் சமீப காலமாக ஈட்டிங் டிஸ் ஆர்டர் (Eating Disorder) எனப்படும் உண்ணுதல் குறைபாடு அதிகரித்து வருகிறது. ஆனால், அது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஈட்டிங் டிஸ் ஆர்டர் என்பது இரண்டு வகையாக இருக்கலாம். ஒரு வகையில் எதையுமே சாப்பிட மாட்டார்கள் அல்லது மிகக் குறைந்த அளவே சாப்பிடுவார்கள்.  இன்னொரு வகையில் சாப்பிட்டதை வேண்டுமென்றே வாந்தி எடுத்து வெளியேற்றுவார்கள்.

இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகள், எடையைக் குறைத்த பிறகும், சாப்பிட பயப்படுவார்கள். எதைச் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்குமோ என பயப்படுவார்கள். இது ஒருவிதமான உளவியல் பிரச்னையும்கூட. எனவே, உங்கள் மகளுக்கு இது போன்ற பிரச்னை ஏதேனும் இருக்கிறதா, அதனால் எடை குறைகிறதா அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்றும் பாருங்கள். உங்கள் மகளின் நடவடிக்கைகளில் அசாதாரண மாற்றங்களை உணர்ந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது. அவராக எந்த டயட்டையும் பின்பற்ற அனுமதிக்காதீர்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.