BCCI News : ஐசிசி நடத்திய சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்திருக்கும் நிலையில், ஐசிசி மற்றும் பிசிசிஐ மீது கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்திய நிலையில், இறுதிப்போட்டி நடக்கும்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த யாரும் கோப்பை வழங்கும் விழாவில் இல்லை. இதற்கு ஐசிசி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. போட்டியை நடத்திய பாகிஸ்தான் அணியின் பிரதிநிதி சாம்பியன் கோப்பை வழங்கிய நிகழ்வில் இருந்திருக்க வேண்டும், ஆனால் ஒருவர்கூட இல்லாமல் இருந்ததை பார்க்கும்போது, இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தியதா? அல்லது இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தியதா? என்ற கேள்வி எழுகிறது என பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த விமர்சனத்துக்கு வலுசேர்க்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பிளேயர் ஆன்டி ராபர்ட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஐசிசி, பிசிசிஐ இரண்டும் வேறல்ல ஒன்று தான். எனக்கு எப்போதே இது தெரியும். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மொத்த கிரிக்கெட்டையும் அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். இது நல்லதல்ல. சர்வதேச கிரிக்கெட் அமைப்புக்கு (ஐசிசி) தனித்துவம் இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் இப்போது இருப்பதாக இல்லை.
இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன நினைக்கிறதோ அதையே ஐசிசி செயல்படுத்துகிறது. நாளைக்கு இந்தியா வைடு மற்றும் நோபால் வேண்டாம் என்று கூறினால் உடனடியாக அதனை கிரிக்கெட்டில் இருந்து நீக்குவதற்கு ஐசிசி தயாராக இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அங்கமாக மாறிவிட்டது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று அவர் விமர்சித்துள்ளார்.
அவரின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஐசிசி சொல்லும் முடிவுக்கு இந்தியா கட்டுப்படுவதை விடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியம் சொல்வதையே ஐசிசி கேட்கிறது என்பதற்கு நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரே சாட்சியாக அமைந்திருக்கிறது என்றும் ஆன்டி ராபர்ட்ஸ் கருத்து ஆதரவாக கூறியுள்ளனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் தான் நடத்தியது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நாட்டுக்கு செல்ல மறுத்துவிட்டது. இதனால் இருநாடுகளுக்கும் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபி அனைத்து போட்டிகளையும் விளையாடியது. மற்ற அணிகள் பல மைதானங்களில் இந்த தொடரை விளையாடிய நிலையில் இந்திய அணி மட்டும் துபாய் மைதானத்தில் மட்டுமே விளையாடி அனைத்து போட்டிகளையும் விளையாடி கோப்பையையும் கைப்பற்றியது.