உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா முடிவடைந்ததையடுத்து, ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின்போது அதிக அளவில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இதையடுத்து அதிக அளவில் ஒலி மாசு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலம் முழுவதும் நிறைவேற்றப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். பின்னர் பேட்டியளித்த யோகி ஆதித்யநாத், “வழிபாட்டுத் தலங்களில் ஒலி மாசு ஏற்படுவதை நிரந்தரமாக கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். மத வழிபாட்டு தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார். வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதோடு பசுமாடுகள் கடத்தப்படுவதை தீவிரமாக கண்காணிக்கும்படியும், அவ்வாறு கடத்துபவர்கள் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வளர்ச்சித் திட்டங்கள் தாமதம் அடையக் கூடாது என்றும், ஒவ்வொரு திட்டத்திற்கும் ஓர் அதிகாரியை நியமித்து கண்காணிக்கும்படியும், திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வாரம் ஒரு முறை அறிக்கை வாங்கும்படியும் அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
வெயில் காலம் என்பதால் தண்ணீர் விநியோகம் தடையற்ற முறையில் நடைபெறவேண்டும் என்றும், கோதுமை கொள்முதல் மையங்களில் விவசாயிகளுக்கு மலிவுவிலையில் உணவு வழங்குவதை உறுதி செய்யும்படியும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக விடுதி மற்றும் குறைந்த விலை உணவகங்களை ஏற்படுத்தும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 10 கிரிமினல்களை அடையாளம் காணும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.