ஜோஸ் பட்லர் நீக்கம்.. ஐபிஎல் விதியில் இதை மாற்றலாம் – சஞ்சு சாம்சன் ஆதங்கம்!

18வது ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி அடுத்த மாதம் அதாவது மே 25ஆம் தேதி முடிவடைகிறது. இதற்காக சென்னை, மும்பை, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட 10 அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த முறை ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அணிகளின் கேப்டன்கள், வீரர்கள் என மாற்றங்கள் அரங்கேறி உள்ளன. இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஸ்டார் தொடரில் பேசிய சஞ்சு சாம்சன், 13 வயது வைபவ் சூர்யவம்ஷியின் வரவு, ரியான் பராக், துருவ் ஜுரேல், ஷிம்ரோன் ஹெட்மையர் தக்கவைப்பு குறித்தும் ஜோஸ் பட்லர் வெளியேற்றம் குறித்து என பல விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். 

மேலும் படிங்க: இந்தியா சொல்வதையெல்லாம் செய்வீங்களா? ஐசிசி மீது காட்டமான விமர்சனம்

சஞ்சு சாம்சன் பேசுகையில், இன்றைய இளம் வீரர்களுக்கு தன்னம்பிக்கைக்கு குறைவே இல்லை. அவர்கள் தைரியமானவர்களாக இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட்டின் நிலைமையையும், விளையாட வேண்டிய பாணியையும் அவர்கள் நன்கு புரிந்துக்கொள்கின்றனர். அதேபோல் அவர்களுக்கு நேரடியாக ஆலோசனை சொல்வதை விட, அவர்களை முதலில் கவனிக்க விரும்புகிறேன். அவர்களுக்கு என்ன மாதிரியான ஆதரவு தேவை என்பதை பார்க்கிறேன். 

வைபவ் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். அவர் பயிற்சியின் போதே ஏராளமான சிக்சர்களை அடிக்கிறார். எனவே அவருடைய பலத்தை புரிந்து கொண்டு அவரை ஆதரிக்க வேண்டும். சகோதரனை போல அவரது அருகில் இருப்பது முக்கியம். அவரிடம் தேவையான அனைத்து திறமைகளும் இருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் அவர் இந்தியாவுக்காக விளையாடுவார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நம்புகிறேன் என்றார். 

ஜோஸ் பட்லர் வெளியேற்றம் 

ஐபிஎல் பல நெருக்கமான நட்புகளை உருவாக்க உதவுகிறது. அந்த வகையில், எனக்கு ஜோஸ் பட்லர் நெருக்கமான நண்பர். நாங்கள் 7 ஆண்டுகள் சேர்ந்து விளையாடி உள்ளோம். அவர் என்னுடைய மூத்த சகோதரர் போன்றவர். நான் கேப்டன் ஆனபோது, அவர் துணை கேப்டனாக இருந்து எனக்கு பெரிதும் உதவினார். அவரை அணியில் இருந்து வெளியே அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அது எனக்கு மிகவும் கடினமான அனுபவமாகும். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின்போது கூட, இதை பற்றி பேசினேன். 

ஐபிஎல் தொடரில் ஏதேனும் விதியை மாற்ற வேண்டும் என்றால், நான் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வீரர்களை விடுவிக்கும் முறையை மாற்றுங்கள் என கூறுவேன். ஒரு அணிக்கு மாற்றம் தேவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், பல ஆண்டுகளாக கட்டியமைத்த உறவுகளை இழக்க நேரிடுகிறது. இந்த முடிவு எனக்கு மட்டும் அல்ல. சக வீரர்கள், உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருக்குமே கடினமான ஒன்றாக இருந்தது. ஜோஸ் பட்லர் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி எனத் தெரிவித்தார். 

மேலும் படிங்க: ரோகித்துடன் இறங்கப்போகும் வீரர் இவர்தான்.. அப்போ இம்பேக்ட் வீரர் யார்? மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் 11 இதோ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.