புதுடெல்லி: டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரிட்டன் சுற்றுலா பயணி ஒருவர் இரண்டு ஆண்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கட்டதாக போலீஸார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக பிரிட்டன் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் இன்று (மார்ச் 13) கூறுகையில், “பிரிட்டன் பெண் சுற்றுலா பயணி கைலாஷ் என்ற நபருடன் சமூக ஊடகம் வாயிலாக நட்பில் இணைந்துள்ளார். அப்பெண் கோவாவில் இருந்து, கைலாஷைக் காண டெல்லி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கைலாஷுடன் சமூக ஊடகத்தில் நட்பாகி உள்ளார். பின்பு அவர்கள் அடிக்கடி உரையாடியுள்ளனர்.
கிழக்கு டெல்லியில் வசித்து வரும் கைலாஷ் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறிய நிலையில், அப்பெண்ணுடன் பேசுவதற்கு மொழிபெயர்ப்பு செயலி ஒன்றினைப் பயன்படுத்தியுள்ளார். அப்பெண் இந்தியா வந்தபோது, அவரும் பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டப்பட்டுள்ள கைலாஷும் டெல்லியில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
பிரிட்டன் பெண், கைலாஷை சந்திக்க கோவாவிலிருந்து டெல்லி வந்துள்ளார். அங்கு மஹிபால்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துள்ளார். தன்னை சந்திக்க வந்த கைலாஷ், அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
முன்னதாக அப்பெண், ஹோட்டல் லிஃப்டில் ஹோட்டலின் ஹவுஸ்கீப்பிங் பணியாளர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.” என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவங்கள் குறித்து அறிய போலீஸார் ஹோட்டலின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.