தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, திமுகவின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதற்கான வாக்குமூலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகராக (ரூ.88 லட்சம் கோடி) உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை தமிழக அரசு வெளியிட்டுள்ள 2024-25-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த இலக்குகளை திமுக அரசால் எட்டிப்பிடிக்க முடியவில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம்தான் இந்த பொருளாதார ஆய்வறிக்கை.
உதாரணமாக 2023-24-ம் ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூ.28.32 லட்சம் கோடியாக இருக்கும் என்று திமுக அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், அதில் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக ரூ.27.22 லட்சம் கோடி என்ற அளவையே தமிழகம் எட்டிப் பிடித்திருக்கிறது. அதாவது 2021-22-ல் ரூ.20.71 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் பொருளாதாரம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.6.50 லட்சம் கோடி மட்டுமே வளர்ச்சியடைந்து ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கை அடைய வேண்டுமென்றால், தொடர்ச்சியாக ஆண்டுக்கு 12 சதவீதத்துக்கும் கூடுதலாக வளர்ச்சியடைந்தால் மட்டுமே சாத்தியமாகும். அதாவது, அடுத்த 7 ஆண்டுகளில் இன்னும் ரூ.50 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்துவது என்பது சாத்தியமற்றது. தமிழகத்தின் மனித வளத்தை மது, கஞ்சா போதையைக் கட்டவிழ்த்து விட்டு சிதைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, அந்நிலையை மாற்றி விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.