தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற திருக்காளாத்தீஸ்வரர் ஞானம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இந்த திருக்கோயிலில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாசித்தேரோட்டத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெற்ற இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மஞ்சள் பட்டுடுத்தி திருக்காளத்தீஸ்வரர் உடன் திருத்தேரில் எழுந்தருளிய ஞானம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நமசிவாய நாமம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ உத்தமபாளையம் பகுதியில் உள்ள 4 ரத வீதிகள் வழியாக திருத்தேராட்டம் நடத்தப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் உத்தமபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.