புதுடெல்லி: நாடு முழுவதும் ரயில்களில் பயணிகள் நிரம்பி வழியும் விவகாரம் குறித்து மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரிவான பதிலளித்துள்ளார்.
இது குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி புதன்கிழமை எழுப்பியக் கேள்வி: “நம் நாட்டில் ரயில்களில் பயணிக்கும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பது குறித்து அரசுக்குத் தெரியுமா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் பிரச்சினையைத் தீர்க்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? முக்கிய ரயில்களில் முன்பதிவில்லாத பொது மற்றும் படுக்கை பெட்டிகளின் எண்ணிக்கையை அரசு குறைத்துள்ளதா?” எனக் கேட்டிருந்தார்.
தூத்துக்குடி எம்.பி கனிமொழியின் இந்தக் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த எழுத்துபூர்வ பதில்: “இந்திய ரயில்வேயின் கீழ் இயக்கப்படும் ரயில்களில் கூட்டம் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ‘பீக் பீரியடு’ எனப்படும் அதிக கூட்டமுள்ள காலங்கள், கூட்டம் குறைவான காலங்கள் என வேறுபட்டே இருக்கிறது.
அதிக நெரிசல் உள்ள காலங்களில், குறிப்பாக பிரபலமான வழித்தடங்களில் ரயில்களில் கூட்டம் நிரம்பியே இருக்கும். அதேசமயம் சற்று மக்கள் போக்குவரத்து குறைந்த வழித்தடங்களில் கூட்டம் குறைவாகவே இருக்கிறது. இந்திய ரயில்வேயில் இயங்கும் ரயில்களின் போக்குவரத்து முறை வழக்கமான கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அதன்படி கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்ய, ஏற்கெனவே உள்ள ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்படுகின்றன.
சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன, புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்தில் ரயில்களின் விகிதம் அதிகரிக்கப்படுகிறது. மேலும், ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவதற்கான தொடர்ச்சியான முயற்சியில், இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது.
பயணிகளின் கூடுதல் தேவைகளைப் பூர்த்தி செய்ய பண்டிகைகள், விடுமுறை நாட்கள் போன்றவற்றின் போது சிறப்பு ரயில் சேவைகளையும் இயக்குகிறது.அதன்படி, 2024 ஆம் ஆண்டில், ஹோலி மற்றும் கோடை விடுமுறையின் போது பயணிகளின் கூடுதல் நெரிசலைப் பூர்த்தி செய்ய சிறப்பு ரயில்கள் 13 ஆயிரத்து 523 முறை இயக்கப்பட்டன.
துர்கா பூஜை, தீபாவளி பண்டிகைகளின் போது ஏற்பட்ட கூட்டத்தை சமாளிக்க, சிறப்பு ரயில்கள் மூலம் 7990 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அக்டோபர் 1, 2024 முதல் நவம்பர் 30, 2024 வரை சுமார் 1.8 கோடி பயணிகளுக்கு இந்த கூடுதல் ரயில் சேவைகள் பயன்பட்டுள்ளன. சமீபத்தில் முடிவடைந்த மகா கும்பமேளாவின் போது பயணிகளுக்கு வசதியாக, ஜனவரி 13, 2025 முதல் 28 பிப்ரவரி, 2025 வரை 17 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியுள்ளது. இதன் மூலம் தோராயமாக 4.24 கோடி மக்கள் பயன்பெற்றனர். மேற்கூறியவற்றைத் தவிர, பல்வேறு பிரிவு பயணிகள் பயன்பெறும் வகையில் பல கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
பயணிகளுக்கான கூடுதல் வசதிகளும் நிரந்தர, தற்காலிக அடிப்படையில் அமைக்கப்பட்டன. 2023-24 ஆம் ஆண்டில், ரயில் சேவைகளை அதிகரிக்க நிரந்தர அடிப்படையில் 872 பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.அதே நேரத்தில், 2024-25 ஆம் ஆண்டில் (பிப்ரவரி, 2025 வரை) 983 பெட்டிகள் நிரந்தர விரிவாக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
பொது மற்றும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு அதிக இடவசதியை வழங்கப்படுகிறது.இந்த வகையில், மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களில், 22 பெட்டிகள் கொண்ட ரயிலில் 12 பொது மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் 8 ஏசி பெட்டிகள் என்பதுதான் இப்போது பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் பொது மற்றும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு அதிக இடவசதி வழங்கப்படுகிறது.
தற்போது ரயில்களின் மொத்த பெட்டிகளில், மூன்றில் இரண்டு பங்கு ஏசி அல்லாதவை, மூன்றில் ஒரு பங்கு ஏசி பெட்டிகளாக இருக்கின்றன. கூடுதலாக, இந்திய ரயில்வே அமிர்த பாரத் சேவைகள் மூலம் பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.பயணிகளின் வசதிகளை அதிகரிக்கும் நோக்கில், எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கப்படும் மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களில், முன்பதிவு செய்யப்படாத சுமார் 1200 பொது வகுப்பு பெட்டிகள் நடப்பு நிதியாண்டில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வே 17,000 க்கும் மேற்பட்ட பொது வகுப்பு/ஸ்லீப்பர் வகுப்பு (ஏசி அல்லாத) பெட்டிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.2024-25 நிதியாண்டில் (பிப்ரவரி 2025 வரை), ரயில் பெட்டி தொழிற்சாலைகள் 6485 பெட்டிகளை தயாரித்துள்ளன” என்று அமைச்சர் தன் பதிலில் தெரிவித்துள்ளார்.