பஞ்சாப் | பார்க்கிங் பிரச்சினையில் பக்கத்து வீட்டுக்காரர் தாக்குதல்; இளம் ஆராய்ச்சியாளர் மரணம்

மொஹாலி: இருசக்கர வாகனம் நிறுத்துவதில் உண்டான பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் பக்கத்து வீட்டுக்காரர் தள்ளியதில் கீழே விழுந்து, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. ஐஐஎஸ்இஆர்-ல் ஆராய்ச்சியாளராக இருந்த அபிஷேக் ஸ்வர்ன்கர் (39), தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது அவர் அங்கு வாகனத்தை நிறுத்த அவரின் அண்டை வீட்டில் வசிக்கும் மோன்டி என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்பு மோதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், அபிஷேக் தனது வாகனத்தை ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறார். அங்கு ஏற்கெனவே சிலர் நின்றுகொண்டிருக்கிறார்கள். அபிஷேக் வாகனம் நிறுத்த மோன்டி எதிர்ப்பு தெரிவிக்கிறார். சிறிய வாக்குவாதத்துக்கு பின்பு மோன்டி அபிஷேக்கை கீழே தள்ளி விட, அதில் நிலைதடுமாறி விழும் அபிஷேக் பின்பு எழவே இல்லை. அருகில் இருந்த சிலர் அவர் எழுவதற்கு உதவி செய்த போதும் அவர் மீண்டும் நிலை குழைந்து கீழே விழுவது பதிவாகியுள்ளது.

போலீஸ் தரப்பில், ‘அபிஷேக் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். பாதிக்கப்பட்டவரை குற்றம்சாட்டப்படுபவரே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். உயிரிழந்த அபிஷேக் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர், அவர் தொடர்ந்து டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக், மோஹாலியில் உள்ள ஐஐஎஸ்இஆரில் ஆராச்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவர் மோஹாலில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோஹாலி காவல் நிலையம் பிரிவு – 2 காவல்நிலைய ஆய்வாளர், “குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 105-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணிகள் நடந்து வருகின்றன.” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.