விருதுநகர்: “பெண்களுக்கு அண்ணனாக இருந்து உதவி செய்பவர் முதல்வர் ஸ்டாலின்,” என்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 12) நடைபெற்றது. நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை, சாத்தூர், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 130 பெண்களுக்கு ரூ.79.12 லட்சம் மதிப்பில் தங்க நாணயங்கள் மற்றும் ரூ.53.75 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.1.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், “இன்று உங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அண்ணனாக இருந்து தங்கக் காசு வழங்குவது முதல்வர் ஸ்டாலின். அவர் கொடுப்பதை நாங்கள் கொண்டுவந்து இங்கு கொடுக்கிறோம். பெண்களுக்கான அனைத்து நல்ல காரியாங்களையும் செய்யும் ஒரே முதல்வர் ஸ்டாலின்தான். பெண்கள் முன்னேற்றம் அடைந்தால்தான் சமுதாயம் முன்னேறும் என்று நினைக்கும் கட்சி திமுக. கல்வி கற்றால் நாகரீகமும் சேர்ந்து வரும். வீட்டில் பெண்கள் செய்யும் வேலைக்கு அங்கீகாரமாக உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அரசு வழங்குகிறது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவுகள் வழங்கப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதோடு தாய்மார்களின் பணிச்சுமையும் குறைகிறது. யாரும் ஓட்டுவாங்க வருவார்கள், போவார்கள். எல்லோரும் ஓட்டுக்கேட்டு வருவார்கள். ஓட்டுக் கேட்பது ஜனநாயக உரிமை. நீங்கள் கூட மனுத்தாக்கல் செய்து ஓட்டுக் கேட்கலாம். ஆனால், யார் நமக்கு நல்லது செய்வார்கள் என்பதை பார்க்க வேண்டும். நல்லது செய்யக்கூடிய ஒரே முதல்வர் ஸ்டாலின்தான். இந்த அரசுக்கு நீங்கள் உதவியாக இருங்கள். நிறைய திட்டங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம். உங்களுக்காகவே இந்த அரசு இருக்கும்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 161 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.64 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களையும், 15 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கான தங்கத்தினையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். இந்நிழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.