சென்னை: சென்னையில் மார்ச் 19-ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியம், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2013-ம் ஆண்டு 1.8 கி.மீ.க்கு ரூ.25, அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கு ரூ.12 என ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்பிறகு கட்டணத்தை அரசு உயர்த்தவில்லை. இந்நிலையில், 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், விலைவாசி உயர்வுக்கேற்ப மீட்டர் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஆட்டோ சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் 1.5 கி.மீ.க்கு ரூ.50, அடுத்தடுத்த கி.மீ.க்கு ரூ.25 என நிர்ணயிக்க வலியுறுத்தினோம். குழுவும் பரிந்துரையை அரசுக்கு அனுப்பியது. இவையனைத்துக்கும் மேலாக திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைப்போம் என்று கூறியிருந்தது. ஆனால் தற்போது வரை கட்டணத்தை மாற்றி அமைக்கவில்லை.
பைக் டாக்சிக்கு தடை: கார்ப்பரேட் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கி.மீ.க்கு ரூ.76 வசூலிக்கின்றன. அத்தகைய நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய ஆட்டோக்களுக்கு ரூ.10 ஆயிரம் அரசு மானியம் என்னும் தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், ஆட்டோ செயலியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொழிற்சங்கங்கள் இணைந்து மார்ச் 19-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
சென்னை நகரில் இயங்கும் சுமார் ஒரு லட்சம் ஆட்டோக்களில் 60 சதவீதம் ஆட்டோக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. தொமுச சங்கம் பங்கேற்கவில்லை என்றாலும், தொழிலாளர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.