போர்ட் லூயிஸ்: மொரிஷியஸ் நாட்டு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இருநாடுகள் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மொரிஷியஸின் 57-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி சென்றிருந்தார். தலைநகர் போர்ட் லூயிஸில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பு அணிவகுப்பை பார்வையிட்டார்.
இரு நாட்டு குழுவினர் இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வங்கி, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துறையில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
இருநாடுகள் இடையேயான வர்த்தகத்தை உள்நாட்டு கரன்சியில் மேற்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கியும், மொரிஷியஸ் மத்திய வங்கியும் ஒப்பந்தம் செய்தன.
நீர் கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி அளிக்க மொரிஷியஸ் அரசு மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய வெளியுறவு சேவை மையம், மொரிஷியஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்திய கடற்படை, மொரிசியஸ் காவல்துறை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. நிதிமுறைகேடு குற்றங்களை தடுக்க இந்தியாவின் அமலாக்கத்துறை, மொரிஷியஸின் நிதி தொடர்பான குற்றங்கள் ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மொரிஷியஸ் தொழில்துறை அமைச்சகம் இடையே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்தியாவின் கடல்சார் தகவல் சேவைகள் மையம் மற்றும் மொரிஷியஸ் கடல்சார் நிர்வாகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாயின.
இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியா – மொரிஷியஸ் இடையேயான உறவை மேலும் வலுவாக்க நானும், மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலமும் முடிவு செய்துள்ளோம். மொரிஷியஸில் புதிய நாடாளுமன்றம் கட்ட இந்தியா உதவும். இது ஜனநாயகத்தின் தாய் மொரிஷியஸ்க்கு அளிக்கும் பரிசாக இருக்கும்.
இந்தியாவும், மொரிஷியஸும் இந்திய பெருங்கடலால் மட்டும் இணைந்திருக்கவில்லை. கலாச்சார மதிப்புகளால் இணைந்துள்ளன. மொரிஷியஸ் நாடு ஒரு மினி இந்தியா. இருநாடுகள் இடையேயான பிணைப்பு வரலாற்றில் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, மொரிஷியஸில் சாகர் என்ற தொலைநோக்கு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது இப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான திட்டமாகும்.
இத்திட்டத்தில் வளர்ச்சிக்கான வர்த்தகம், திறன் மேம்பாடு, பரஸ்பர பாதுகாப்பு ஆகிய அனைத்து விஷயங்களும் அடங்கியுள்ளது. பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் இருநாடுகளும் இணைந்து செயல்படும். மொரிஷியஸ் நாட்டின் தனிப்பட்ட பொருளாதார மண்டலத்துக்கு தேவையான பாதுகாப்பை அளிப்பதில் நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்தையும் பிரதமர் மோடி சந்தித்தார். அவருடான சந்திப்பு நன்றாக இருந்ததாக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மொரிஷியஸ் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் லெஸ்ஜாங்கார்டையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
140 கோடி பேருக்கான கவுரவம்: மொரிஷியஸ் சுதந்திர தின விழாவில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான ‘தி கிராண்ட் கமாண் டர் ஆஃப் த ஆர்டர் ஆஃப் த ஸ்டார் அண்ட் கீ ஆஃப் த இண்டியன் ஓசன்’ அளித்து கவுரவிக்கப்பட்டது. இந்த விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது:
மொரிஷியஸ் நாட்டின் மிக உயரிய தேசிய விருது வழங்கப்பட்டதற்காக மொரிஷியஸ் சகோதர, சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு அளிக்கப்பட்ட கவுரவம் அல்ல.
140 கோடி இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட கவுரவம். இந்த விருதை இந்தியாவில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மொரிஷியஸ் வந்த முன்னோர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்களின் கடின உழைப்பு மூலம் மொரிஷியஸ் முன்னேற்றம் கண்டுள்ளது” என்றார்.