IPL 2025: 2021-22 தொடரில் இங்கிலாந்தை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஆஷஸ் கோப்பையை வென்றது, 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது, 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது என ஆஸ்திரேலியாவை அடுத்தடுத்து வெற்றிப் பாதைக்கு கொண்டுச்சென்றவர் பாட் கம்மின்ஸ்.
IPL 2025: ஐபிஎல் கோப்பையை தவறவிட்ட பாட் கம்மின்ஸ்
இங்கிலாந்தில் நடந்த 2023 ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் முடிந்தாலும் பாட் கம்மின்ஸ் கோப்பையை தக்கவைத்தார். 10 ஆண்டுகள் மேலாக இந்தியாவிடம் பறிகொடுத்து வந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையை பாட் கம்மின்ஸ் 2024-25 தொடரில் வென்று காட்டினார். கேப்டன்ஸியில் தான் ஜித்து ஜில்லாடி என்பது கடந்த ஐபிஎல் தொடரிலும் அவர் நிரூபித்து காட்டினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர், வில்லியம்சன் வெளியேறிய பின்னர் சற்று திணறி வந்த நிலையில், பாட் கம்மின்ஸ் கடந்த ஆண்டில் ஹைதராபாத்தின் கேப்டனாக பொறுப்பேற்று அணியை இறுதிப்போட்டி வரை கொண்டுசென்றார். இருப்பினும் அவரால் கோப்பையை வெல்ல இயலவில்லை.
IPL 2025: அதீத நம்பிக்கையில் காவ்யா மாறன்
ஐபிஎல் தொடரில் அவர் முதல்முறையாக கேப்டன்ஸி பொறுப்பை பெற்றதும் கடந்த முறைதான். ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனும் பாட் கம்மின்ஸ் மீது அதீத நம்பிக்கையை வைத்துள்ளார். 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் எஸ்ஆர்ஹெச் அணி கோப்பையை வெல்ல பாட் கம்மின்ஸ் நிச்சயம் இந்த முறை வழிவகை செய்வார் என்ற நம்பிக்கையில், அவரை ரூ.18 கோடிக்கு தக்கவைத்தது.
IPL 2025: பாட் கம்மின்ஸ் காயம்
இந்நிலையில், பாட் கம்மின்ஸ் தற்போது காயத்தில் அவதிப்பட்டு வருவதால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது. பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் அவருக்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகியவற்றை தவறவிட்டார்.
IPL 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் கேப்டன்ஸி யாருக்கு?
அந்த வகையில், அவர் ஐபிஎல் தொடரின் ஒரு சில போட்டிகளை தவறவிடக்கூடும் என கூறப்படுகிறது. இருப்பினும் அது உறுதிசெய்யப்படவில்லை. ஒருவேளை அவர் விளையாடவில்லை என்றால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி யாரை கேப்டனாக நியமிக்கும் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. பந்துவீச்சுக்கு கூட பல மாற்று வீரர்கள் இருந்தாலும் கேப்டன்ஸியை பார்க்க பெரியளவில் யாருமே இல்லை.
அதிலும் குறிப்பாக இந்திய வீரர்கள் பலரும் அனுபவம் குறைவானவர்களும், கேப்டன்ஸிக்கு பழகப்படாதவர்களும் உள்ளனர். இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது ஷமி, ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் இருந்தாலும் இவர்களுக்கு ஐபிஎல் தொடரில் எவ்வித கேப்டன்ஸி அனுபவமும் இருந்ததில்லை. இஷான் கிஷன், உனத்கட் உள்ளூர் தொடர்களில் கேப்டன்ஸியை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2025: ஹென்ரிச் கிளாசென் vs டிராவிஸ் ஹெட்
இருப்பினும், ஹென்ரிச் கிளாசென் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரில் ஒருவருக்கே கேப்டன்ஸியை கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. இதில் கிளாசெனுக்கு தென்னாப்பிரிக்க டி20 அணியை சில போட்டிகளில் தலைமை தாங்கிய அனுபவம் உள்ளது. ஹெட்டும் ஆஸ்திரேலிய டி20 அணிக்கு சில போட்டிகளில் தலைமை தாங்கி உள்ளார்.
ஒருவேளை பாட் கம்மின்ஸ் விளையாடாதபோது, இந்த இருவரில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம். இவர்கள் இருவருமே பிளேயிங் லெவனில் தவிர்க்கப்பட இயலாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.