புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் ஷாஜஹான்பூரில் ‘லாட் சாஹேப்’ எனும் பெயரில் ஹோலி பண்டிகை வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது. இதில் வழக்கம்போல் முன்னெச்சரிக்கையாக அனைத்து மசூதிகளும் தார்பாய்களால் மூடப்பட்டுள்ளன.
உ.பி உள்ளிட்ட வட இந்தியா முழுவதிலும் நாளை மார்ச் 14 ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. உ.பி.யின் ஷாஜஹான்பூரில் கொண்டாடப்படும் ஹோலிக்கு ஒரு தனிப் பாரம்பரியம் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஹோலிக்கும் ’லாட் சாஹேப்’ எனும் பெயரில் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இரண்டு வகையான ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.
இவை, தொடங்குவதற்கு முன், நகரத்தில் உள்ள அனைத்து மசூதிகளும் பிளாஸ்டிக் மற்றும் தார்பாய்களால் முழுமையாகப் போர்த்தி மூடப்பட்டுள்ளன. ஊர்வலத்தால் சிறுபான்மையினரின் மதநம்பிக்கை காயப்படாமலிருக்க முன்எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஷாஜஹான்பூரின் ஹோலியில், ’படே லாட் சாஹேப் (பெரிய நவாப்), சோட்டே லாட் சாஹேப் (சிறிய நவாப்)’ என இரண்டு ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் யாராவது ஒருவரை (பெரும்பாலும் சிறுபான்மையினர்) ’லாட் சாஹேப்’ என்ற பெயரில் எருமை மாட்டு வண்டியின் மீது அமர வைக்கிறார்கள்.
பிறகு ஊர்வலமாகக் கொண்டுசெல்லும் பாதையின் இருபக்க வீடுகள், கடைகளிலிருந்து பொதுமக்கள் நின்று செருப்புகளை வீசுகின்றனர். வழியில் வரும் பாபா விஸ்வநாத் எனும் சிவன் கோயிலில் பூசை செய்து லாட் சாஹேபுகளையும் வணங்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.
இந்நிகழ்ச்சிக்காக, ஷாஜஹான்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் வழக்கம் போல் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றுக்கு தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பு இந்த வருடம் தமிழரான சு.ராஜேஷ் ஐபிஎஸ் அதிகாரிக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ல் ஐபிஎஸ் பெற்ற அதிகாரி ராஜேஷ் உபி மாநிலப் பிரிவில் பணியாற்றுகிறார். கோவில்பட்டியை சேர்ந்த இவர், ஷாஜஹான்பூர் மாவட்ட எஸ்பியாக உள்ளார். கடந்த ஜனவரி 1 இல் டிஐஜியாக ராஜேஷ் பதவி உயர்வு பெற்றுள்ளார். எனினும், ஷாஜஹான்பூரின் ஹோலி காரணமாக அவர் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தால், எஸ்பி பதவியிலேயே தொடர வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஷாஜஹான்பூர் எஸ்.பி.யான தமிழர் சு.ராஜேஷ் கூறும்போது, “மிகவும் வித்தியாசமான இந்த ஹோலியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனினும், 1986 முதல் இந்நிகழ்ச்சியினால், அவ்வப்போது மதக்கலவரங்கள் நடந்த வரலாறும் உள்ளது. இதனால், இந்த ஊர்வலங்கள் அரசு நிர்வாகத்துக்கு மிகப்பெரிய சவாலாகும்.
இதன் சின்ன ஊர்வலம் 3 கி.மீ, 7.5 கி.மீ தூரம் நடைபெறுகிறது. இதன் இருவேறு பாதைகளில் உள்ள மொத்தம் 27 மசூதிகள் மீதும் ஊர்வலத்தினரின் செருப்புகள் விழாதபடி மூடி வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணியில் மாவட்ட நிர்வாகம் மத்திய காவல் படையான ஆர்ஏஎஃப் மற்றும் உபியின் பிஏசி படைகளின் சுமார் 3,500 காவலர்கள் உதவுகின்றனர்.” எனத் தெரிவித்தார்.
வரலாற்று பின்னணியில் நவாப்: இந்தியாவில் எங்குமே இல்லாத வகையிலான இந்த ஹோலிக்கு ஒரு வரலாற்று பின்னணி கூறப்படுகிறது. இதன்படி, இப்பகுதியில் ஆட்சி செய்த ஒரு நவாபின் அடக்குமுறைக்கு எதிராக ஒரு கட்டத்தில் பொதுமக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதையடுத்து வந்த ஹோலி பண்டிகையிலும் தம் எதிர்ப்புகளை காட்டத் தொடங்கியுள்ளனர். இதில் லாட் சாஹேப்பாக தேர்வு செய்பவர் கடைசிவரை ரகசியமாக வைக்கப்படுகிறார். அவர் மீது செருப்பு வீசப்படுவதுதான் காரணம். இந்த ஹோலி கொண்டாட்டத்தில் இணையும் முஸ்லிம்களும் ஊர்வலத்தினரின் கோபத்தின் வீரியத்தைக் குறைக்க முயல்கின்றனர். சில பகுதிகளில் முஸ்லிம்கள் தம்முன் வரும் ஊர்வலத்தினர் மற்றும் ‘லாட் சாஹேப்’ மீது ரோஜா இதழ்கள் தூவி வரவேற்கின்றனர்.