புதுடெல்லி: ஹோலி வண்ணங்களிலிருந்து பாதுகாக்க, முஸ்லிம்களை தார்பாலினாலான ஹிஜாப் அணியக் கூறி வாரியத் தலைவர் ரகுராஜ் சிங் அறிவுரை வழங்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
நாளை மார்ச் 14 ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலியை முன்வைத்து உ.பி பாஜக தலைவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களை விமர்சித்து வருகின்றனர்.
முன்னதாக, அலிகர் மக்களவை தொகுதியின் பாஜக தலைவர் சதீஷ் கவுதம், தாம் இந்துக்களால் எம்.பி.யானதாகவும், தமக்கு முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்றும் தெரிவித்திருந்தார். இவர் தொடர்ந்து மூன்றாவது முறை அலிகர் எம்.பி.யாக இருப்பவர்.
உ.பி.யின் பஸ்தியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான கெட்கி சிங், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முஸ்லிம்களுக்கு தனி வசதி ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ‘இந்து மற்றும் முஸ்லிம் நோயாளிகளைக் கலப்பது சுகாதார ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்’ எனக் காரணம் கூறினார்
இதுபோல், தொடர்ந்து உ.பி. பாஜகவின் தலைவர்கள் அம்மாநிலத்தின் முஸ்லிம்கள் மீது விமர்சனங்களை முன் வைக்கின்றனர். இந்தவகையில் உ.பி.யின் மற்றொரு முக்கியத் தலைவரான ரகுராஜ் சிங்கும் முஸ்லிம்கள் மீது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக ஆளும் உ.பி.யில் மாநில கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் ரகுராஜ் சிங் அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை தொழுகையுடன் ஹோலியும் கொண்டாடப்பட உள்ளது.
இந்த ஹோலியில் வண்ணங்கள் வீசி விளையாடிக் கொள்வார்கள். முஸ்லிம்கள் தங்கள் வெள்ளைத் தொப்பிகளையும், ஆடைகளையும் வண்ணங்களிலிருந்து பாதுகாக்க விரும்பினால், அவர்கள் தார்பாலினாலான ஹிஜாப் அணிய வேண்டும்.
ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் நிறங்கள் எங்கு விழுகின்றன என்பதை பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். எனவே, ஹோலியில் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது முஸ்லிம்களின் பொறுப்பாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘அலிகர் பல்கலை.யில் ராமர் கோயில்’ மேலும், பாஜகவின் மூத்த தலைவர் ரகுராஜ் சிங் உபியின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்தை தன் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இதில் அவர், பல்கலைக்கழகத்துக்குள் ஒரு ராமர் கோயில் கட்டவும், தனிப்பட்ட முறையில் அடிக்கல் நாட்டவும் தனது அனைத்து செல்வங்களையும் நன்கொடையாக வழங்குவதாகவும் கூறியுள்ளார்.