Rahul Dravid: ஊன்றுகோலுடன் களத்துக்கு வந்த டிராவிட்… இணையத்தில் வைரலாகும் வீடியோ – நடந்தது என்ன?

ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தா vs பெங்களூரு ஆட்டத்துடன் கோலாகலமாக தொடங்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து ஐ.பி.எல் அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடிய வீரர்கள் வரிசையாக தங்களின் ஐ.பி.எல் அணிகளுடன் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஊன்றுகோல் சாதன உதவியுடன் தனது அணி வீரர்களுக்கு பயிற்சியளிக்க களத்துக்கு வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

IPL
IPL

முன்னதாக, 2021 இறுதியில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, டிராவிட் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார். அதையடுத்து, 2023 ஒருநாள் உலகக் கோப்பையோடு டிராவிட் பதவிக் காலம் முடிவுக்கு வரவே, 2024 டி20 உலகக் கோப்பை வரை அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இறுதியில், இந்திய அணி அதில் சாம்பியன் பட்டம் வெல்லவே, சாம்பியன் பயிற்சியாளராக இந்திய அணியிலிருந்து டிராவிட் விடைபெற்றார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு இறுதியில் ஐ.பி.எல் மெகா ஏலத்துக்கு முன்பாக, கடந்த காலங்களில் (2012, 2013) தான் கேப்டனாக வழிநடத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவ்வாறிருக்க, கடந்த மாத இறுதியில் நசூர் மெமோரியல் ஷீல்ட் எனும் கர்நாடக உள்ளூர் கிரிக்கெட் தொடரில் டிராவிட் தனது மகன் அன்வேயுடன் விஜயா கிரிக்கெட் கிளப் சார்பில் களமிறங்கினார். இதில், அரையிறுதியில் ராகுல் டிராவிட் தனது மகனுடன் சேர்ந்து 66 பந்துகளில் 43 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் ஆடிக்கொண்டிருந்தபோது காலில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.

இதனால், ராஜஸ்தான் அணி கேம்ப்பில் ராகுல் டிராவிட் இணைவாரா என்று சந்தேகம் எழுந்தது. இத்தகைய சூழலில்தான், ராஜஸ்தான் அணி அணி நிர்வாகம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் எக்ஸ் தளத்தில், “பெங்களூருவில் கிரிக்கெட் விளையாடும் போது காயமடைந்த தலைமை பயிற்சியாளர் டிராவிட், குணமடைந்து வருகிறார். இன்று ஜெய்ப்பூரில் எங்களுடன் இணைவார்.” என்று பதிவிட்டது. அதன்படி, நேற்று மாலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் டிராவிட் இணைந்தார்.

அதோடு, ஊன்றுகோல் உதவியுடன் டிராவிட் களத்துக்கு வரும் வீடியோவையும் அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையதளவாசிகள் பலரும் டிராவிட்டின் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.

ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் ஐதராபாத் அணியை மார்ச் 23-ம் தேதி எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.