TASMAC: "டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி ஊழல்" – குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமலாக்கத்துறை; பின்னணி என்ன?

அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 6-ம் தேதி எழும்பூரில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் அக்கார்ட் டிஸ்டில்லர்ஸ் அண்ட் பிரேவர்ஸ் என்ற மதுபான நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தியது.

அன்றே, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, “ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்குக் கொண்டு வந்துள்ளது” என்று முதல்வர் ஸ்டாலினை எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார்.

அமலாக்கத்துறை

இதற்கு எதிர்வினையாயற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “மும்மொழிக் கொள்கை திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம் ஆகியவற்றைத் திசை திருப்ப மத்திய அரசு, டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்துகிறது” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது குறித்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், “அமலாக்கத்துறை, மார்ச் 6-ம் தேதியன்று பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் டாஸ்மாக் மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களின் குற்றங்கள் தொடர்பாகப் பல மாவட்டங்களில் சோதனை நடத்தியது. டாஸ்மாக் தொடர்புடைய பிரச்னைகளில் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, பணியிடமாற்றம், போக்குவரத்து டெண்டர், பார் உரிமம் டெண்டர், சில மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமான ஆர்டர்கள், பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 அதிகமாக வசூலித்தது போன்ற குற்றங்களுக்கான தரவுகள் கிடைத்தன.

அமலாக்கத்துறை அறிக்கை
அமலாக்கத்துறை அறிக்கை

(1) டாஸ்மாக் போக்குவரத்து டெண்டர்: விண்ணப்பதாரரின் KYC விவரங்கள் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் (DD) ஆகியவற்றுக்கு இடையே உள்ள பொருத்தமின்மை ஒரு வெளிப்படையான பிரச்னை. ஏலதாரர் விண்ணப்பக் காலக்கெடுவிற்கு முன் தேவையான டிடி-யைக் கூட பெறவில்லை. இறுதி ஏலத்தில் ஒரே ஒரு விண்ணப்பதாரர் இருந்தபோதிலும் டெண்டர்கள் வழங்கப்பட்டன. இதில், டாஸ்மாக் நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 100 கோடி போக்குவரத்துக்கு வழங்கியிருக்கிறது. (2) பார் லைசென்ஸ் டெண்டர்கள்: GST/PAN எண்கள், முறையான KYC ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு இறுதி டெண்டர்கள் ஒதுக்கப்பட்டன.

அமலாக்கத்துறை அறிக்கை
அமலாக்கத்துறை அறிக்கை

(3) டிஸ்டில்லரி நிறுவனங்களுக்கும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதை ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. இது, வேண்டுமென்றே ஆர்டர்களை அதிகரித்தல் உள்ளிட்ட தேவையற்ற சலுகைகளை அம்பலப்படுத்துகின்றன. இவை, ஊழல் தடுப்பு சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றங்களை உறுதிசெய்கிறது.

SNJ, Kals, Accord, SAIFL, சிவா டிஸ்டில்லரி ஆகிய மதுபான நிறுவனங்கள், தேவி பாட்டில்கள், கிரிஸ்டல் பாட்டில்கள் மற்றும் GLR ஹோல்டிங் போன்றவற்றுடன் பெரிய அளவிலான நிதி மோசடிகள், கணக்கில் காட்டப்படாத பணப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பது சோதனையில் தெரியவந்திருக்கிறது. கணக்கில் காட்டப்படாத ரூ. 1,000 கோடியை மறைப்பதற்காக, மதுபான ஆலைகள் திட்டமிட்ட முறையில் செலவுகளை உயர்த்தி, போலியான கொள்முதல்களை, குறிப்பாக பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்கள் மூலம் போலியான கொள்முதல் கணக்குவழக்குகளைச் செய்திருக்கின்றன என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

டாஸ்மாக்

இந்தப் பணம், டாஸ்மாக்கிலிருந்து அதிக ஆர்டர்களை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில், டாஸ்மாக் அதிகாரிகள், மதுபான மற்றும் பாட்டில் தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்புடைய டாஸ்மாக் ஊழியர்களிடத்தில் விசாரணை செய்யப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.