தமிழக வெற்றிக் கழகத்தின் 6 ஆம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் இன்று வெளியிட்டிருக்கிறார். விஜய் முதல் 5 கட்டமாக மா.செ-களை அறிவித்தபோது பெரிய சலசலப்பில்லை. ஆனால், இன்று விஜய் அறிவித்திருக்கும் பட்டியல் கட்சிக்குள் சில தரப்பினரிடம் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.

மாசி மஹம் மற்றும் வளர்பிறை நாள் என்பதால்தான் வழக்கம்போல நியூமராலஜிப்படி 19 மாவட்டச் செயலாளர்களை அறிவிக்கும் எண்ணத்தோடு இன்றைய நாளை டிக் அடித்திருக்கிறது பனையூர் தரப்பு. ஆனால், நீலாங்கரை வீட்டிலிருந்து விஜய் கிளம்பியபோதே பஞ்சாயத்து தொடங்கிவிட்டது. விஜய்யின் கார் பனையூர் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திருவொற்றியூரைச் சேர்ந்த த.வெ.க டீம் ஒன்று, விஜய்யின் காரை மறித்து அவரிடம் ஒரு மனுவைக் கொடுக்க முயன்றது. ஆனால், அதை விஜய் வாங்கவில்லை.
அதேமாதிரி, வரிசையாகப் பல மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை அறிவித்துவிட்ட போதும் இன்னும் தூத்துக்குடி மாவட்டத்தை மட்டும் சீண்டாமலேயே இருக்கிறார்கள். காரணம், இடியாப்பச் சிக்கலாக இருக்கும் உட்கட்சி பூசல்தான். ஆக்டிவாக வேலை செய்து வரும் அஜிதா ஆக்னல் என்கிற பெண் நிர்வாகிக்கும், தலைமைக்கு நெருக்கமான ஒரு தரப்புக்கும்தான் பெரும் பஞ்சாயத்தாக இருக்கிறதாம். தலைமைக்கு நெருக்கமான தரப்பு தங்களுக்கு ஆதரவான தொழிலதிபர் ஒருவருக்குத் தூத்துக்குடியில் முக்கியப் பொறுப்பை வாங்கிக் கொடுக்க மூவ் செய்து வருகிறது. இது அஜிதா ஆக்னல் தரப்புக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கிறது. ‘வேலை பார்த்தது நாங்கதான். நேத்து வந்தவங்களுக்குப் பதவி கொடுத்தா கட்சி எப்படி வளரும்? ஒரு வருசத்துல மட்டும் 1 கோடி ரூபாய் கட்சி நிகழ்ச்சிகளுக்காகச் செலவழிச்சு வேலை பார்த்திருக்கோம். நாங்க எப்படி விட்டுக்கொடுக்க முடியும்?’ எனக் கொந்தளிக்கிறது அஜிதா தரப்பு.

இந்த பஞ்சாயத்தும் இன்று விஜய்யின் காதுகளுக்குச் சென்றிருக்கிறது. இன்றைய கூட்டத்தை முடித்துச் செல்கையில், தென் மாவட்டத்தில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் ஒருவரை அழைத்து அந்த பிரச்னையைச் சீக்கிரம் முடியுங்கள் என்றும் விஜய் அறிவுறுத்தியிருக்கிறார்.
விஜய்யின் டிரைவரும் உதவியாளருமான ராஜேந்திரன் நீண்டகாலமாக அவருடன் பயணித்து வருகிறார். நிர்வாகிகள் நியமனம் பற்றிப் பேசத் தொடங்கிய கட்டத்திலிருந்தே, அவர் தனது மகனுக்கு மா.செ பதவி வேண்டி விஜய்யிடம் தனிப்பட்ட முறையிலேயே மூவ் செய்திருக்கிறார். அவரின் காய் நகர்த்தலுக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது. விருகம்பாக்கம் தொகுதியைச் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டமெனப் பிரித்து அதன் செயலாளராக ராஜேந்திரனின் மகனான சபரிநாதனுக்கு நியமன ஆணையைக் கொடுத்திருக்கிறார் விஜய்.
‘மக்கள் இயக்கத்துக்காக உழைத்தவர்களுக்கு மட்டுமே பதவி கொடுப்போம் எனப் பேசிவிட்டு, இப்போது திடீரென பதவிக்காகவே கட்சிக்குள் வந்தவருக்குப் பொறுப்பு கொடுப்பதா?’ என அந்தப் பகுதியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் குமுறுகின்றனர்.

‘ராஜேந்திரன் அண்ணன் எங்கள் தளபதியுடனே அவரின் நிழலாக இருப்பவர். ஆனாலும் அவர் பையன் என்பதற்காகச் சபரிக்குப் பதவி கொடுக்கவில்லை. அந்தத் தொகுதிக்குள் அவர் நிறைய பணிகள் செய்திருக்கிறார். அதற்கான அங்கீகாரம்தான் மா.செ பதவி’ என சப்போர்ட் செய்கிறது தலைமைக்கு நெருக்கமான ஒரு தரப்பு.
நீலாங்கரையிலிருந்து கிளம்பிய விஜய்யின் காரை ஒரு டீம் மறித்ததல்லவா? அந்த பஞ்சாயத்தும் என்னவென்று விசாரித்தோம்.
‘திருவெற்றியூர் தொகுதியைத் திருவள்ளூர் தென் கிழக்கு மாவட்டமெனப் பிரித்து R.K. மணிகண்டன் என்பவருக்கு வழங்கியிருக்கிறார்கள். அவருக்கும் தொகுதிக்கும் சம்பந்தமே இல்லை. அவர் ஆர்.கே.நகரைச் சேர்ந்தவர். அவர் அங்கேதான் உழைத்திருக்கிறார். அவரைக் கூட்டி வந்து திருவொற்றியூர் தொகுதியில் பதவி கொடுத்திருக்கிறார்கள். யாருக்கும் பதவி கொடுங்கள், கொடுக்க வேண்டாம் என நாங்கள் சொல்லவில்லை. அந்தந்த பகுதியில் உழைத்தவரை அங்கீகரியுங்கள் என்றுதான் சொல்கிறோம்.’ எனத் தகவல் சொல்கிறது விஜய்யின் காரை மறித்த அந்த டீம். விஜய் கூட்டத்தை முடித்துக் கிளம்புகையில் இவர்களின் மனுவைக் கேட்டு வாங்கி சென்றிருக்கிறார்.

‘உழைச்சவங்களுக்கு சரியா பதவி கொடுத்திருக்கோம். அங்க இங்க ஒன்னு ரெண்டு இடத்துல வர்ற பஞ்சாயத்து வேணும்னே கிளப்பி விடப்படுறதுதான்’ என ஊடகத்தினரிடம் விளக்கியிருக்கிறார் ஆனந்த்.
நிர்வாக வசதிக்காக கட்சி ரீதியாக 120 மாவட்டங்களாகப் பிரிக்கிறோம் என்றுதான் முதலில் அறிவித்திருந்தார்கள். கோஷ்டி பூசல், பவர் பாலிட்டிக்ஸ், பதவி பஞ்சாயத்து என நாலாபுறமிருந்தும் அம்புகள் பாய்வதால் தேன் கூட்டில் கைவைத்த நிலைமையில் இருக்கிறது பனையூர் வட்டாரம். இதனால் சொன்னதை விட அதிகமாக மேலும் 10-15 மாவட்டங்களை உருவாக்கிக் கூடுதல் மா.செக்களை நியமித்துச் சமாளிக்கும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
