சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்போது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி போட்டியில் காயத்தை சந்தித்த அவர், அதிலிருந்து மீளாததால் சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்கவில்லை.
தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் அவர் பெங்களூருவில் பி.சி.சி.ஐ.யின் மருத்துவக்குழுவின் கண்காணிப்பின் கீழ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் அவர் இன்னும் முழு உடற் தகுதியை எட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஐ.பி.எல். தொடரில் சில ஆட்டங்களை தவற விட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பும்ரா இப்படி காயம் அடையாமல் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான கிளென் மெக்ராத் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பும்ரா மற்ற பந்துவீச்சாளர்களை விட உடலுக்கு மிகவும் அழுத்தத்தை கொடுக்கிறார். அந்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு வழிகளை முன்பே அவர் கண்டுபிடித்து இருந்தார். ஆனாலும் தற்போது அவரால் அதை கண்ட்ரோல் செய்ய முடியாமல் போனது. நான் வேகத்தை குறைத்து வீசியதாலே நீண்ட நாட்கள் விளையாடினேன். எனவே சரியான வேகத்தில் பந்துவீச வேண்டும். பும்ரா கூடுதல் வேகத்தை குறைத்துக் கொண்டு சராசரியான வேகத்தில் பந்துவீசினால் காயமும் ஏற்படாது, நீண்ட காலமும் விளையாடலாம்” என்று கூறினார்.