தனது நட்பு வட்டத்தில் உள்ள உதவி இயக்குநர்களின் குறும்படங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சும் விதமாக தனது ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ சேனலில் வெளியிட்டு வருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெளியான ‘எழுதா கதையோ’ குறும்படத்தை தொடர்ந்து இப்போது ‘மௌன வதம்’ என்ற குறும்படத்தை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் பாலாஜி தரணிதரனின் உதவியாளரான அமிர்த ராஜா இயக்கியுள்ள இந்த குறும்படம், சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வரவேற்பை அள்ளியிருக்கிறது. இயக்குநர் அமிர்த்த ராஜாவிடம் பேசினோம்.

”இயக்குநர் பாலாஜி தரணிதரனிடம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ஒருபக்க கதை’ படங்கள்ல உதவி இயக்குநராக வேலை செய்திருக்கேன். கொரோனா காலகட்ட சமயத்துல ‘மௌன வதம்’ குறும்படக் கதையை எழுதினேன். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். உண்மைக்கு புரளிக்கும் இடையே நடக்கற ஒரு விஷயத்தை மையப்படுத்தி இந்த கதை நகரும். வேலராமமூர்த்தி தான் லீட் ரோல்ல நடிச்சிருக்கார். ‘அசுர வதம்’ இயக்குநர் மருது பாண்டி ஒரு கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கார்.

‘மௌன வதம்’
இந்தக் கதை ரெடினாதும், ‘ஏஸ்’ படத்தின் இயக்குநர் ஆறுமுககுமார் சார், பாலாஜி தரணிதரன் சார், அவங்களோட நண்பர் பகவதி பெருமாள், சனித் விஜய்குமார்னு பலரும் சேர்ந்து இந்த ஷார்ட் ஃபிலிமை தயாரிச்சிருக்காங்க. படத்தை முடிச்சிட்டு அவங்களிடம் காண்பித்தேன். படம் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
போன வருஷம் ரெடியானாலும் கூட, திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வச்சோம். மும்பை, கேரளா, ஜெய்ப்பூர்னு பல இடங்களில் நடந்த சர்வதேச திரை விழாக்களில் கவனம் ஈர்த்திருக்கிறது. சென்னை திரைப்பட விழாவிலும் ஸ்பெஷல் ஜூரி அவார்டு கிடைச்சிருக்குது.

நான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ல வேலை செய்திருக்கறதால விஜய் சேதுபதி சாரோட நட்பு வட்டத்துல இருந்தேன். என் குரு பாலாஜி சார் தான் ‘இதை விஜய் சேதுபதி சாரை வெளியிட கேட்ட வைக்கலாம்”னு முயற்சிகள் எடுத்தார்.
பாலாஜி சார் கேட்டதும், சேதுபதி சார் உடனே ‘ஓகே’ சொல்லிட்டார். மொத்தம் 5 நாட்கள்ல இந்த குறும்படத்தை இயக்கிட்டேன். இப்ப நல்ல வரவேற்பு கிடைக்கறது சந்தோஷமா இருக்குது. அடுத்து பெரிய திரைக்கு வர்றேன். ‘பன் பட்டர் ஜாம்’ ஹீரோ ராஜூவை வைத்து ஒரு படம் பண்றேன். passion ஸ்டூடியோஸ் தான் தயாரிக்கிறாங்க. அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் ஒரு பக்கம் போயிட்டிருக்குது” என்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
