இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலக கோப்பையில் விளையாட சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி 12 வருடங்களுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற பிறகு தற்போது சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தையும் இந்திய அணி வென்றுள்ளது. இந்திய அணியில் தோனிக்கு பிறகு இரண்டாவது முறையாகவும், உலக அளவில் சர் கிளைவ் லாயிட், ரிக்கி பாண்டிங் மற்றும் டேரன் சமி ஆகியோருக்கு பிறகு ஐந்தாவது கேப்டனாகவும் இரண்டு அல்லது மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரோகித் சர்மா. மேலும் கிளைவ் லாயிட்க்கு பிறகு தொடர்ந்து இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
ஓய்வு குறித்து ரோகித் சர்மா
சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் ரோகித் சர்மா மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் அவர் ஓய்வையை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்துங்கள் வந்தது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஓய்வு குறித்து தற்போது நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். “தற்போது வரை எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை, அனைத்து கிரிக்கெட்டையும் விளையாட விரும்புகிறேன். எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை மனதில் வைத்து தான் ரோகித் சர்மா இப்படி பேசி உள்ளார் என்று கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையில் பைனல் வரை சென்று இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
2027 உலக கோப்பையில் ரோகித் சர்மா
தனது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு, ரோகித் சர்மா அடுத்ததாக 2027 உலக கோப்பையில் மனதில் வைத்து அதற்கான பயிற்சியை தொடங்க உள்ளார் என்று கூறப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே மற்றும் நபிபியாவில் ஐசிசி ஒரு நாள் உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது. 2027 ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் இடம் பெற, இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் இணைந்து ரோஹித் சர்மா சில பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மா பிட்டாக இல்லை என்று பலரும் தெரிவித்து வரும் நிலையில், அதிலும் கவனம் செலுத்தி பிட்டாக இருப்பதற்கான வேலைகளையும் தொடங்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
டெஸ்டில் ரோகித் சர்மா
ஐபிஎல் 2025 தொடர் முடிந்த பிறகு தொடங்க உள்ள இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா இடம் பெறமாட்டார் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் மோசமாக விளையாடியதால் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு பிசிசிஐ புதிய கேப்டனை தேடி வருவதாகவும், பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகும் கூறப்படுகிறது. ஐபிஎல் 2025ல் ரோகித் சர்மா எவ்வாறு விளையாடுகிறார் என்பதை பொறுத்தும் அவரது டெஸ்ட் எதிர்காலம் முடிவு செய்யப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.