பாகிஸ்தான் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கி, ரகசிய தகவல்களை அனுப்பிய, உ.பி. ஹஸ்ரத்பூர் ஆயுத தொழிற்சாலை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்ரத்பூர் என்ற இடத்தில் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலை உள்ளது. இங்கு ராணுவத்துக்கு தேவையான பலவித ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ரவீந்திர குமார் என்பவர் பணியாற்றுகிறார். இவருக்கு பேஸ்புக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த நேகா சர்மா என்பவர் கடந்தாண்டு வலை விரித்தார். இவர் பாகிஸ்தான் உளவாளி. அவரிடம் வீழ்ந்த ரவீந்திர குமார், நேகா கேட்கும் தகவல்களை எல்லாம் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.
இவர்கள் இருவர் இடையே உள்ள தொடர்பு மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க, நேகா சர்மாவின் பெயரை ‘சந்தன் ஸ்டோர் கீப்பர் 2‘ என தனது செல்போனில் ரவீந்திர குமார் பதிவு செய்துள்ளார். அவருக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஆயுத தொழிற்சாலையின் தினசரி உற்பத்தி அறிக்கை, ட்ரோன்கள் பரிசோதனை, ஆயுத இருப்புகள், ரகசிய கடிதங்கள் உட்பட பல தகவல்களை அனுப்பியுள்ளார்.
உளவுத்துறையின் கண்காணிப்பு கருவிகளில், ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு அனுப்பும் நபர் ரவீந்திர குமார் என அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து அவர், ஆக்ராவில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டார். முதலில் மழுப்பலாக பதில் கூறிய ரவீந்திர குமாரின் செல்போன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் சந்தன் ஸ்டோர் கீப்பர் 2 என்ற பெயரில் ஆயுத தொழிற்சாலையில் ரகசிய ஆவணங்கள் அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனது குற்றத்தை ரவீந்திர குமார் ஒப்புக் கொண்டார்.
அவரை கைது செய்த உ.பி. தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகசிய சட்டங்களின் பல பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர். பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவல்களை அனுப்புகிறோம் என தெரிந்தே ரவீந்திர குமார் இந்த குற்றத்தை செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
பெண்கள் மூலம் பாகிஸ்தான் உளவுத் துறை , இந்திய பாதுகாப்பு துறையில் பணியாற்றும் பலருக்கு வலை விரித்து, ரகசிய தகவல்களை பெறும் முயற்சியில் நீண்டகாலமாக ஈடுபட்டுள்ளது. அதில் தற்போது ரவீந்திர குமார் சிக்கி கைதாகியுள்ளார்.