பெருசு விமர்சனம்: 'இப்படியெல்லாமா பிரச்னை வரும்?' – சிக்கலான அடல்ட் காமெடி சிரிக்க வைக்கிறதா?

சாமிக்கண்ணு (சுனில்), துரை (வைபவ்) ஆகிய இருவரும் ஊரில் மதிப்பும் மரியாதையும் பெற்ற பெருசு (எ) ஹாலாஸ்யத்தின் மகன்கள். ஒரு நாள் ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பும் பெருசு, திடீரென இறந்து போகிறார். ஆனால், அவரது சடலத்தை வெளியே காட்ட முடியாத சிக்கல் உண்டாகிறது. இதனால் குடும்பமே சோகத்தில் ஆழ, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

பெருசு விமர்சனம்
பெருசு விமர்சனம்

மிகவும் துக்கமான நாள் அதிர்ச்சி நிறைந்த நாளாக மாற, இதைப் பெரிய அவமானமாக நினைத்து ஊர் மக்களிடமிருந்து இதை மறைக்க நினைக்கின்றனர். இந்தக் குழப்பத்துக்கு இடையே இறுதிச் சடங்கை எப்படி முடிக்கின்றனர், அந்த இறுதிச் சடங்கின்போது வெளிவரும் உண்மைகள் என்னென்ன என்பதே ‘பெருசு’ படத்தின் கதை.

ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்றே புரியாமல் தடுமாறும் இடம், ஓரளவுக்குப் பொறுப்புணர்வு நடந்து கொள்ளும் தன்மை என அண்ணன் பாத்திரத்துக்கு நியாயம் சேர்கிறார் சுனில். குறிப்பாகத் தந்தையிடம் இறுதிவரை பேசாமலே இருந்துவிட்டதை எண்ணி குற்றவுணர்வு கொள்ளும் இடத்தில் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்து ஸ்கோர் செய்திருக்கிறார் சுனில். அவருக்குத் தம்பியாகக் குடிகாரராக வரும் வைபவ், இரண்டாம் பாதியில் சிரிக்க வைத்தாலும், முதல் பாதியில் கதாபாத்திரத்தோடு ஒட்டாத செயற்கையான உணர்வையே கொடுக்கிறார். பாலசரவணன், முனீஷ்காந்த் காமெடி கூட்டணி ஆங்காங்கே சில நிமிடங்கள் கிச்சு கிச்சு மூட்டுகிறது.

கேமராவைப் பார்த்துப் பேசுவது போலவே நடித்துள்ள நிஹாரிகா நடிப்பில் இன்னும் பயிற்சி தேவை. மற்றொரு நாயகியாக வரும் சாந்தினியின் நடிப்பில் பெரிதாகக் குறையேதுமில்லை. இறுதிக் காட்சியில் தனம், சுபத்ரா ஆகிய இருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு நடித்திருப்பது கலகலப்பு! ஒரே ஒரு வசனத்தை ‘நறுக்’கென்று பேசி கைதட்டல் வாங்குகிறார் சுவாமிநாதன். அடுத்தவரின் வீட்டில் உளவு பார்ப்பதாக வரும் ரமாவின் நடிப்பில் செயற்கைத்தன்மையே எட்டிப் பார்க்கிறது. இதுதவிர ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், கருணாகரன், கார்த்திகேயன் சந்தானம் ஆகியோரும் வந்து போகிறார்கள்.

ஒரு சிறிய வீடு, அதற்குள் எக்கச்சக்க கதாபாத்திரங்கள் எனச் சிறிய இடத்தில், நேர்த்தியான கேமரா கோணங்கள், சிறப்பான ஒளியுணர்வைக் கொடுத்துக் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யா திலகம். அதைத் தொந்தரவு செய்யாமல் சிறப்பாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சூரிய குமரகுரு. இருப்பினும் இரண்டாம் பாதியில் காமெடியிலிருந்து உணர்வுபூர்வமான காட்சிக்கு மாறும் இடங்களில் ‘ஜம்ப்’ அடிப்பதைச் சற்றே கவனித்திருக்கலாம். அருண்ராஜின் பின்னணி இசை நகைச்சுவை உணர்வுக்கு உதவியிருக்கிறது. ஆனால், பாடல்கள் பெரிதாக வேலை செய்யவில்லை.

ஆரம்ப காட்சியிலே நேராகக் கதைக்குள் செல்லும் திரைக்கதை நம்மையும் ஈர்த்துக் கொள்கிறது. வார்த்தை விளையாட்டு, பிரச்னையையே கேலியாக மாற்றும் அவல நகைச்சுவை ஆகிய அஸ்திரங்களை வைத்து இதை அடல்ட் காமெடியாக மாற்ற முயன்றிருக்கிறார் இயக்குநர் இளங்கோ ராம். ஆனால், 10-க்கு 5 என்ற விகிதத்தில் அதில் பாதிதான் வேலை செய்திருக்கிறது. ஒவ்வொரு நபருக்கும் பிரச்னையின் தன்மையை விளக்குவது ஆரம்பத்தில் சிரிப்பைக் கொடுத்தாலும் போகப் போக ரீப்பீட் அடிக்கிறது. அதிலும் குடிகாரராக வைபவ்வின் ஃபர்பார்மன்ஸும், ரெடின் கிங்ஸ்லி எபிசோடும் செயற்கைத்தனத்தைக் கொட்டி அயற்சியைத் தருகின்றன.

இரண்டாம் பாதி ஆரம்பிக்க மீண்டும் 50-50 காமெடி மோடுக்குள்ளே சுற்றுகிறது திரைக்கதை. பாலாஜி ஜெயராமன் வசனங்கள் கிரேஸி மோகனின் கம்பிரஸ்ட் வெர்ஷனாக ஒரு சில இடங்களில் வெடித்து சிரிக்க வைத்தாலும், ‘பாயின்ட்’, ‘மேட்டர்’ என்று பல இடத்தில் வலுக்கட்டாயமாக மட்டுமே சிரிக்கச் சொல்கிறது. அதேபோல இயல்பான திரைமொழி இருக்க வேண்டிய படத்தில், கமர்ஷியல் பாணியிலான ட்ரீட்மெண்ட் துருத்திக்கொண்டே தெரிவது ஏமாற்றமே! குடும்ப மானத்தை அப்பாவின் மரணத்திலும் தேடும் நபர்களுக்கு, அப்பா இரண்டு மனைவிகள் வைத்திருப்பது நெருடலாகத் தெரியாதது நகைமுரண். அதை ஆண்மையின் பெருமையாக நிலைநிறுத்தும் வசனங்களும் தவிர்த்திருக்க வேண்டியவை!

மொத்தத்தில் ஒரு புதிய யோசனையில் ஆர்வத்தைத் தூண்டும் இந்த ‘பெருசு’, திரைக்கதையிலும் வசனத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நிஜமாகவே பெரிதாகக் கொண்டாடியிருக்கலாம்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.