மும்பை,
3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் கடந்த மாதம் 14-ந் தேதி வதோதராவில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பெங்களூரு, லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் லீக் சுற்று நடந்தது.
லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் (5 வெற்றி, 3 தோல்வி, 10 புள்ளி) முதலிடம் பிடித்து தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மும்பை இந்தியன்ஸ் (10 புள்ளி) ரன்-ரேட் அடிப்படையில் பின்தங்கியதால் 2-வது இடமும், குஜராத் ஜெயன்ட்ஸ் (8 புள்ளி) 3-வது இடமும் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (6 புள்ளி), உ.பி.வாரியர்ஸ் (6 புள்ளி) முறையே 4-வது, 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறின.
இதில் மும்பையில் உள்ள பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா – ஹேலி மேத்யூஸ் களமிறங்கினர். இதில் பாட்டியா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹேலி மேத்யூசுடன் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவர்-பிரண்ட் சிறப்பாக விளையாடி அணியை முன்னெடுத்து சென்றனர்.
இருவரும் குஜராத் பந்துவீச்சை வெளுத்து வாங்கியதுடன் அரைசதம் அடித்து அசத்தினர். இருவரும் தலா 77 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வேகமாக மட்டையை சுழற்ற மும்பை அணி 200 ரன்களை கடந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை 213 ரன்கள் குவித்துள்ளது. 12 பந்துகளை எதிர்கொண்ட ஹர்மன்ப்ரீத் கவுர் 36 ரன்கள் அடித்த நிலையில் ரன் அவுட் ஆனார். குஜராத் தரப்பில் டேனியல் கிப்சன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் களமிறங்க உள்ளது.