டெல்லி மற்றும் ஆந்திராவில் முன்னாள் முதல்வர்கள் மிகவும் ஆடம்பரமாக மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சொகுசு மாளிகைகளை என்ன செய்வது? என புதிய அரசுகள் குழம்பி வருகின்றன.
டெல்லியில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியின் போது, அங்கு 8 ஏக்கர் பரப்பளவில் அரசு பங்களா ரூ.33 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. மக்கள் வரிப்பணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி அர்விந்த் கேஜ்ரிவால் சொகுசு மாளிகை கட்டியதாக டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக குற்றம் சாட்டியது. அந்த கட்டிடத்திற்கு ‘ஷீஷ் மஹால்’ எனும் பெயரையும் பாஜக சூட்டியது. டெல்லி தேர்தலில் ஷீஷ் மஹால் குறித்து அதிகமான விமர்சனங்களை ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கொண்டது.
இதேபோன்று, ஆந்திராவில், கடந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, ருஷிகொண்டா எனும் அழகிய மலையை வெட்டி அங்கு ரூ.500 கோடியில் 4 சொகுசு மாளிகைகள் கட்டப்பட்டன. இதுவும் மக்களின் வரிப்பணத்தில் வீணாக கட்டியதாக ஆந்திர தேர்தலின் போது தெலுங்கு தேசம் மற்றும் இதன் கூட்டணி கட்சிகள் தீவிரமாக விமர்சித்தன. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ருஷிகொண்டா சொகுசு மாளிகைகள் பளிங்கு கற்கள் மூலம் கட்டப்பட்டன. கழிவறைகள் முதற்கொண்டு படுக்கை அறைகள் வரை 5 நட்சத்திர ஓட்டல்களை மிஞ்சும் வகையில் அதிக பொருட் செலவில் கட்டப்பட்டன.
முதலில் இங்கு ரூ.91 கோடி செலவில் 5 நட்சத்திர ஓட்டல்தான் கட்ட தீர்மானிக்கப்பட்டு, மத்திய அரசின் அனுமதியும் பெறப்பட்டது. ஆனால், அதன்பின்னர், 4 அரசு சொகுசு மாளிகைகள் கட்டப்பட்டன. சுற்றுலா துறையின் கீழ் கட்டப்பட்ட இந்த சொகுசு மாளிகைகளை இப்போது என்ன செய்யலாம் என சந்திரபாபு நாயுடு அரசு ஆலோசித்து வருகிறது. இதே நிலைதான் டெல்லியிலும் நிலவுகிறது.