விவசாயிகள் உள்ளிட்டோருக்கு ரூ.9.5 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு

வேளாண்மை, சிறு, குறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழு, கல்வி ஆகிய துறைகளுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9.5 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையில் 16-ம் நிதி ஆணையம் தமிழகத்துக்கு வருகைதந்த போது நமது அரசு வலுவான கோரிக்கைகளை தகுந்த தரவுகளோடு முன்வைத்தது. அவற்றில், மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை 50 சதவீதமாக அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மாநிலத்தின் பரவலான வளர்ச்சிக்கு வலுவான கடன் பொருளாதாரம் இன்றியமையாததாகும். இதை உணர்ந்து வேளாண்மை, சிறு, குறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழு, கல்வி ஆகிய துறைகளுக்கு கடன் வழங்கும் வங்கிகளுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வரும் நிதியாண்டுக்கென ரூ.9.5 லட்சம் கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 17.47 சதவீதம் அதிகமாகும். ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையத்துடன் இணைந்து, வங்கிகள் கடன் வழங்கும் விதிகளை எளிமைப்படுத்திடும் வகையில் ஒருங்கிணைந்த கடன் வழங்கும் அமைப்பு (Unified Lending Interface) தொழில்நுட்பத்தை பல்வேறு வங்கிகள் மூலம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்கள் என அனைவருக்கும் விண்ணப்பித்த குறுகிய காலத்தில் கடன் வழங்கப்படும்.

தமிழகத்தின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டை துல்லியமாக கணித்திட ரூ.5 கோடியில் விரிவான நிறுவனக் கணக்கெடுப்புகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இவை தமிழகத்தின் பொருளாதாரத்தை துல்லியமாக அளவீடு செய்வதற்கும், தரவு சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் வழிவகுக்கும்.

சிறந்த மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொறியாளர் அளவீடு புத்தகப் பதிவு, ஒப்பந்த மேலாண்மை, மதிப்பீடு தயாரித்தல் மற்றும் பட்டியல் தொகை செலுத்துதல் ஆகியவற்றை இணையவழியில் மேற்கொள்ளும் வகையில், ஒருங்கிணைந்த பணி மேலாண்மை அமைப்பு (Comprehensive Work Management System) என்ற ஒரு புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மென்பொருள் களஞ்சியம் தளத்துடன் இணைக்கப்பட்ட பின்பு மூலதனச் செலவினங்கள் மற்றும் திட்டங்களைக் கண்காணிக்கவும், விரைவாக முடிக்கவும் உறுதுணையாக இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.