லக்னோ: வண்ணங்களின் பண்டிகையான ஹோலி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஹோலியின் வண்ணங்களை எதிர்த்தால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சை ஆகியுள்ளது.
ஹோலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த நேரங்களில் அவ்வழியில் அமைந்துள்ள மசூதிகள் மீது வண்ணக் கலவைகள் படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதையடுத்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் கவலரம் ஏற்படாமல் தடுக்க, முதல் முறையாக அலிகர், பரேலி, சம்பல் நகரங்களில் உள்ள சில மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் உ.பி மாநில அமைச்சரும் நிஷாத் கட்சியின் தலைவருமான சஞ்சய் நிஷாத் கூறியது: “வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மக்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து கொள்வது வழக்கம். அதுபோல ஒற்றுமையை போற்றும் வகையில் ஹோலி பண்டிகை அமைந்துள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது உண்டு.
இருப்பினும் இதை சில அரசியல்வாதிகள் விரும்பவில்லை. அதனால். தங்கள் மனதில் நஞ்சு கொண்ட சிலர் மக்களை தவறான பாதையில் வழி நடத்துகின்றனர். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தான். இருப்பினும் ஹோலி பண்டிகையின் வண்ணங்களில் அவர்களுக்கு சிக்கல் இருந்தால் கதவுகளை அடைத்துக் கொண்டு இருக்க வேண்டாம்; நாட்டை விட்டே வெளியேறலாம்” என கூறினார்.
அவரது இந்த கருத்துக்கு இஸ்லாமியர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளனர். “வெறுப்பைப் பரப்பும் வகையிலும் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை வெளியிட யாருக்கும், உரிமை இல்லை. இது அமைச்சராக இருப்பவருக்கும் பொருந்தும். அவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது, நிறங்களைத் தவிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரமாணம் செய்யவில்லை. மாறாக, அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதாகவும், பாகுபாடு இல்லாமல் செயல்படுவதாகவும் பிரமாணம் செய்தார்” என்று அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரான மவுலானா சஹாபுத்தீன் ரஸ்வி கூறியுள்ளார்.
“தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் தலைவர்களிடையே, யார் சமூகத்தில் அதிக வெறுப்பைப் பரப்ப முடியும், பிரிவினையை உருவாக்க முடியும் என்பதற்கான போட்டி நடந்து வருகிறது. இதுபோன்ற கருத்து நமது பன்முக சமூகத்தின் அடிப்படை நெறிமுறைகளுக்கு எதிரானது. நம் நாட்டில் ஹோலி மற்றும் ஈத் பண்டிகையை பல நூற்றாண்டுகளாக மக்கள் ஒற்றுமையுடன் கொண்டாடி வருகின்றனர். இந்தப் பண்டிகைகள் கொண்டாடப்படுவது இது முதல் முறை அல்ல” என்று காங்கிரஸ் கட்சியின் ஷாநவாஸ் ஆலம் கூறியுள்ளார்.