வீடு, நிலம் வாங்கும்போது அது பிடித்திருக்கிறதா, சரியான இடத்தில் இருக்கிறதா, அதன் மதிப்பு எதிர்காலத்தில் உயருமா, தண்ணீர், மின்சாரம் இருக்கிறதா என்பதையெல்லாம் தேடி தேடி பார்த்து வாங்குவோம். இத்துடன் DTCP, CMDA அல்லது பஞ்சாயத்து அப்ரூவலும் கட்டாயம் தேவை என்பதை இனி தெரிந்துகொள்ளுங்கள்.
‘டி.டி.சி.பி, சி.எம்.டி.ஏ, பஞ்சாயத்து அப்ரூவல் – ஆ…’ என்ற குழப்பம் வருகிறதா? – அப்படி என்றால் என்ன, எதற்கு அது தேவை என்பதை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துசாமி.

டி.டி.சி.பி, சி.எம்.டி.ஏ மற்றும் பஞ்சாயத்து ஒப்புதல் என்றால் என்ன?
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சியில் உள்ள நிலங்களுக்கு நிலம் அல்லது கட்டட வளர்ச்சி ஒப்புதல் வழங்கவும், நிலம் மற்றும் கட்டட விஷயங்களில் அரசு வரையுறுத்தியுள்ள விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்க எடுக்கவும் அமைக்கப்பட்ட சட்டப்பூர்வமான அமைப்புகள் இவை.
நிலத்தை சுற்றியுள்ள வளர்ச்சிகளை பொறுத்து சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கு சி.எம்.டி.ஏ அப்ரூவலை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கொடுக்கும்.
சென்னையை தவிர்த்த, பிற மாவட்டங்களில் இருக்கும் நிலங்களுக்கு நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநரகத்தின் மண்டல இயக்குநர் அல்லது துணை இயக்குநர் டி.டி.சி.பி அப்ரூவல் வழங்குவார்.
பஞ்சாயத்தில் அமைத்துள்ள இடங்களுக்கு அந்தந்த பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி நிலத்திற்கான பஞ்சாயத்து அப்ரூவலை வழங்குவார்.
இந்த அப்ரூவல்கள் ஏன் கட்டாயம் தேவை?
தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019-ன் படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலங்கள் மற்றும் கட்டடங்கள் குறிப்பிட்ட சில வளர்ச்சி விதிகளால் முறைப்படுத்தப்படும்.
வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவது தான் இந்த முறைப்படுத்தலின் முக்கிய நோக்கமாகும். ஆக, இந்த அப்ரூவல்களை பெறும்போது, அதை வைத்து சுற்றுபுறத்தில் பசுமையை பாதுகாத்தல், கழிவுகளை நிர்வாகித்தல் போன்றவற்றை திட்டமிட்டு அரசு செய்ய ஏதுவாக இருக்கும்.

இந்த அப்ரூவல்கள் கட்டாயமா?
ஆம்… இந்த அப்ரூவல்கள் கட்டாயம் தான்.
அப்ரூவல்கள் இல்லாத நிலத்தை வாங்கலாமா?
அப்ரூவல்கள் இல்லாத நிலத்தை வாங்குவதை தவிர்த்துவிடுவது மிக மிக நல்லது.
அப்ரூவல்கள் இல்லாத நிலத்தில் கட்டடம் கட்டினால் என்ன ஆகும்?
சட்டப்படி, அப்ரூவல்கள் இல்லாத நிலத்தில் கட்டடம் கட்டுவது தவறு. அதனால், அந்தக் கட்டடம் அரசால் சீல் வைக்கப்படலாம் அல்லது இடிக்கப்படலாம்.
இந்த அப்ரூவல்களை வாங்குவது எப்படி?
ஒருவேளை, இந்த அப்ரூவல்கள் இல்லாத நிலம் உங்களிடம் இருந்தால் டி.டி.சி.பி, சி.எம்.டி.ஏ, பஞ்சாயத்து அலுவலகங்களை அணுகி நில பத்திரங்கள், வருவாய் ஆவணங்கள், நில வரைப்படங்கள் ஆகியவற்றின் நகல்களை கட்டணத்துடன் சமர்பிக்க வேண்டும்.
அதை செக் செய்தப்பின், அதிகாரிகளால் நிலம் இன்ஸ்பெக்ஷன் செய்யப்படும். பின்னர், கட்டட தொகை, ஓ.எஸ்.ஆர், வளர்ச்சி கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை கட்டினால் அப்ரூவல் கிடைக்கும்.
கட்டட அப்ரூவலுக்கு என்ன தேவை?
சைட் பிளான், கட்டடத்தின் பிளான், நிலத்தின் இருப்பிடத்தைக் காட்டும் முக்கிய வரைபடம், விற்பனை பத்திரம், வளர்ச்சி, அப்ரூவல்… உள்ளிட்ட கட்டணங்கள் தேவை.

அப்ரூவல் வழங்க அதிகாரிகள் என்னென்ன விஷயங்களை முக்கியமாக செக் செய்வார்கள்?
நில உரிமை ஆவணம், மாஸ்டர் பிளானும், வளர்ச்சி பிளானும் ஒரே மாதிரியாக இருக்கிறதா, அரசு கையகப்படுத்திய நிலமா அது உள்ளிட்ட விஷயங்களை செக் செய்வார்கள்.
நிலம் அல்லது கட்டடம் வரையறுக்கப்பட்ட விதிகளுக்குள் இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து பார்ப்பார்கள்.
நிலத்திற்கு ஒப்புதல் இருக்கிறதா என்பதை எப்படி பார்க்க வேண்டும்?
மனைப்பிரிவு அல்லது கட்டட வரைப்படம் மூலம் அந்தந்த அலுவலகங்களில் நேரில் போய் செக் செய்யலாம் அல்லது அதன் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் செக் செய்யலாம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
