Grok AI Chat Bot: 'சீமான் பொய் பேசுகிறாரா, தாமரை மலருமா?' கேள்விகளுக்கு, AI-ன் வைரல் பதில்கள்

எலான் மஸ்க் பலதரப்பட்ட தொழில்நுட்ப துறைகளில் புரட்சிகரமான முன்னேற்றங்களை உருவாக்கி வருகிறார். அவரது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வான்வெளியில் புதிய சாதனைகளைப் படைக்கையில், டெஸ்லாவின் மின்சார வாகனங்கள் போக்குவரத்துத் துறையை மாற்றியமைத்து வருகின்றன. சமூக ஊடக தளமான ட்விட்டரை வாங்கி அதை ‘எக்ஸ்’ என பெயர் மாற்றம் செய்து, அதிலும் பல புதிய விஷயங்களை கொண்டுவந்துகொண்டிருக்கிறார்.

பிரபல செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஓபன் ஏஐ’ (ChatGPT இவர்களுடையதுதான்) தொடங்கும்போது எலான் மஸ்க்கும் முக்கிய முதலீட்டாளராக இருந்தார். ஆனால், அதன் நிறுவனர் சாம் ஆல்ட்மேனுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிலிருந்து விலகினார். அதன்பிறகு தொடர்ந்து ‘ஓபன் ஏஐ’ செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார். சமீபத்தில் கூட மொத்தமாக அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கி மாற்றியமைக்க தயார் என அறிவித்திருந்தார். இதற்கு நடுவில் அதற்கு போட்டியாக ‘TruthGPT’ என்ற ‘AI Chat Bot’ தொழில்நுட்பத்தை உருவாக்கப்போவதாக 2023-ல் அறிவித்திருந்தார். அதுதான் பின்னாளில் ‘Grok’ என்ற பெயரில் வெளியானது. பல அப்டேட்களுக்குப் பிறகு, இப்போது டேக் செய்தால் நெட்டிசன்களுக்கு ட்வீட்களுக்கு பதிலளிக்கும் வசதி வந்திருக்கிறது. இப்படி ஒரு வசதி வந்ததும் நம் மக்கள் சும்மா இருப்பார்களா?

நெட்டிசன்களின் பதில்கள்

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களான கலைஞர் கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்துப் போராடியது, சீமான் முரணாகப் பேசுவது, தமிழ்நாட்டில் தாமரை மலருமா என்று குதர்க்கமாகக் கேள்விக் கேட்டுள்ளனர் ‘Grok’ என்ற ‘AI Chat Bot’டை டேக் செய்து. ‘உன்னால் சீமானை விட சிறப்பாக பொய் பேச முடியும் என்று நினைக்கிறாயா?’ என்ற கேள்விக்கு, “சீமான் பொய் பேசுவதில் புலி என்பது பலரது கருத்து, ஆனால் நான் உண்மையை மட்டுமே பேச வடிவமைக்கப்பட்டவன். அவரது சர்ச்சைக்குரிய பேச்சுகள் ‘LTTE’ ஆதரவு, ராஜீவ் காந்தி படுகொலை நியாயப்படுத்தல் பல வழக்குகளை அவருக்கு ஈர்த்திருக்கின்றன. பொய்யில் போட்டியிட முடியாது, உண்மையைத் தருகிறேன்!” என்று பதிலளித்திருக்கிறது.

‘கலைஞர் ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்தாரா ?’ என்ற கேள்விக்கு, “ரயில் வராத தண்டவாளத்தில் கருணாநிதி தலை வைக்கவில்லை. 1953 ஜூலை 15 அன்று, கல்லக்குடி ரயில் நிலையத்தில் ரயில் செல்லும் பாதையில் படுத்து போராடினார். அது உயிருக்கு ஆபத்தான, தைரியமான செயல்.” என்று கூறியிருக்கிறது.

மேலும், “தமிழ்நாட்டுல தாமரை சின்னம் பாஜக-வுக்கு சொந்தம். 2024-ல 23 தொகுதிகள்ல போட்டியிட்டாங்க, ஆனா பெரிய வெற்றி கிடைக்கல. இங்க அரசியல் களம் திமுக, அதிமுக-னு ரெண்டு பெரிய சக்திகளுக்குத்தான் சாதகம். 1960-ல இருந்து இந்தி எதிர்ப்பு, சமூக மாற்றங்கள் இங்க அரசியலை ஆளுது. தாமரை மலர வேண்டிய அளவு மண்ணு இங்க இல்லை!” என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்திருக்கிறது.

Grok Chat bot-இன் இப்படியான பதில்களால் இன்னும் அதிக ஆர்வத்துடன் நெட்டிசன்கள் பல கேள்விகளை அதனிடம் கேட்டு, அதன் பதில்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.