சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களாக இருந்து வரும் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளில் தனியார் வாகனங்களில் சுற்றுலா செல்ல இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.
கோடை காலங்களில் ஒரே சமயத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் ஊட்டி, கொடைக்கானலை நோக்கி பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் முதல் மிதமிஞ்சிய காற்று மாசு வரை பாதிப்பு ஏற்படுவதாக சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுற்றுலா நடவடிக்கைகள் இயங்க வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு வழிகாட்டுதல்களை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி வருகிறது. இ- பாஸ் எனப்படும் ஆன்லைன் முன்பதிவு அனுமதி உள்ள நிலையில், தற்போது அதில் புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்..!
இது குறித்த நீதிபதிகளின் உத்தரவில் , ” ஊட்டிக்கு வார நாள்களில் 6 ஆயிரம் வாகனங்கள், வார இறுதி நாள்களில் 8 ஆயிரம் வாகனங்களை அனுமதிக்கலாம். அதேபோல் கொடைக்கானலுக்கு வார நாள்களில் 4 ஆயிரம் வாகனங்கள், வார இறுதி நாளகளில் 6 ஆயிரம் வாகனங்களை அனுமதிக்கலாம்.
உள்ளூர் வாகனங்கள், விவசாய வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு பஸ், ரயில் மூலம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை.

வருகின்ற ஏப்ரல் 1 – ம் தேதி முதல் ஜூன் மாத இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஏப்ரல் 25 – ம் தேதி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும். கட்டுப்பாடுகளை அமல்படுத்த கூடுதலாக காவல்துறையினரை நியமிக்க வேண்டும். மின்சார வாகனங்களுக்கு இ – பாஸ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து நகரங்களுக்கு செல்ல மினி மின்சார பஸ்கள் இயக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்” என உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
