பெங்களூரு: கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு தொடர்பான மாநில அரசின் அறிவிப்புக்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப கர்நாடக பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை (KTPP) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தம், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சட்டத் திருத்தம் வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
ஆளும் காங்கிரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத ரீதியில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அக்கட்சி கூறி வருகிறது. இதனால், இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறி உள்ளது.
இதையடுத்து, இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறும்போது, “அரசு ஒப்பந்தங்களில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மாநில அரசின் முடிவு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைத்து சிறுபான்மை சமூகங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குமானது. இந்தச் சட்டம், அனைத்து சிறுபான்மை சமூகங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும்” என்று கூறினார்.
முன்னதாக, முதல்வர் சித்தராமையா மார்ச் 7-ஆம் தேதி கர்நாடக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, பொதுப்பணி ஒப்பந்தங்களில் நான்கு சதவீதம் முஸ்லிம்களுக்கு வகை-II B என்ற பிரிவின் கீழ் ஒதுக்கப்படும்” என கூறினார்.
பல்வேறு அரசு துறைகள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதில் எஸ்சி, எஸ்டி, வகை-I, வகை-II A மற்றும் வகை-II B ஆகியவற்றைச் சேர்ந்த சப்ளையர்களுக்கு ரூ. 1 கோடி வரை இடஒதுக்கீடு வழங்கப்படும். இதில் வகை-II B என்பது முஸ்லிம்களைக் குறிக்கிறது.