ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் மிகவும் ஏழ்மையான 40% குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மருத்துவக் காப்பீட்டு அளிக்கப்படுகிறது. இத்திட்டம் கடந்த ஆண்டு, பொருளாதார நிலையை கணக்கில் கொள்ளாமல் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இந்த வயதை 60 ஆக குறைக்க சுகாதாரத்துக்கான நாடாளுன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் மருத்துவ செலவினங்கள் தற்போது அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு ஒரு குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்துள்ளது.
இக்குழு தனது அறிக்கையில், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியுளளது.
2024-ம் நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.7,200 கோடி ஒதுக்கப்பட்டது. பிறகு இது ரூ.6,800 கோடியாக மாற்றப்பட்டது. என்றாலும் ரூ.6,670 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
இதுபோல் 2025-ம் நிதியாண்டில், ரூ.7,300 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு, ரூ.7,605 கோடியாக திருத்தப்பட்டது. என்றாலும் ஜனவரி 9 வரை செலவிடப்பட்ட தொகை ரூ.5,034.03 கோடியாக இருந்தது.
ஆயுஷ்மான் திட்டத்தை மாநிலங்கள் திறம்பட செயல்படுத்துவதன் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.