“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது தாய்மொழியை பாதுகாக்கும் முயற்சி” என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக, ஜன சேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அக்கட்சியின் தலைவரான பவன் கல்யாண் பேசி இருந்தார். அப்போது அவர், “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது தேசத்துக்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்துக்கும் பொருந்தும். இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக் கூடாது. ஆனால், நிதி ஆதாயத்துக்காக தமிழ் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகின்றன” எனக் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது எங்களின் தாய்மொழியை, எங்களது கலாச்சார அடையாளத்தை சுயமரியாதையோடு பாதுகாக்கும் முயற்சியாகும். இதை யாரேனும் பவன் கல்யாணுக்கு எடுத்துச் சொல்லவும்” என்று சமூக வலைதளப் பக்கத்தில் கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
பவன் கல்யாணின் கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “தொழில்நுட்ப வளர்ச்சி எங்களை திரைப்படங்களை மொழி எல்லைகள் கடந்து ரசிக்கும்படி செய்திருக்கிறது” என்று குறிப்பிட்டு, பவன் கல்யாண் கடந்த 2017-ஆம் ஆண்டு தெரிவித்த கருத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தப் பதிவில் பவன், “வட இந்திய அரசியல்வாதிகள் நம் கலாச்சார பன்முகத்தன்மையை புரிந்து உரிய மரியாதை கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அன்றைய கருத்தையும், இன்றையும் கருத்தையும் ஒப்பிட்டு பவன் கல்யாணை கனிமொழி விமர்சித்துள்ளார். பவன் கல்யாணின் கருத்துக்கு பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.