“சில்க் ஸ்மிதாவைக் காப்பாற்றத் தவறிட்டேன்" – கடைசி போன்கால் நினைவுகூரும் நடிகை அனுராதா

திரைப்படங்களில் கதாநாயகியாகப் புகழ்பெற ஆசைப்பட்ட அனுராதாவுக்குக் கிடைத்தது பெரும் ஏமாற்றம். பிறகு, கவர்ச்சி வேடங்களில் களமிறங்கி ரசிகர்களிடம் பெரிதும் புகழ்பெற்றவர். வில்லியாகவும் அசத்தியவர், காதல் கணவருக்குத் தாயாகி, குடும்பச் சுமைகளையும் திறம்பட எதிர்கொண்டார். இன்றும் நடிப்பைத் தொடரும் அனுராதா, தன் வெற்றிப் பயணம் குறித்து மனம் திறக்கிறார்.

“…பத்திரிகைகளில் என் படங்களைப் பார்த்த ‘செம்மீன்’ ஷீலா மேடம், அவர் தயாரித்து இயக்கிய ‘காதலிக்க 90 நாள்’ தமிழ்ப் படத்துல என்னை ஹீரோயினா அறிமுகப்படுத்தினாங்க. அந்தப் படத்தில் எனக்கு ஜோடி ரவிச்சந்திரன் சார். அவர் நண்பராக நாகேஷ் சார். என் அப்பாவாக ஜெமினி கணேசன் சார். என் அத்தைகளாக மனோரமா, சுகுமாரி, எஸ்.வரலட்சுமி அம்மாக்கள். ஏராளமான நட்சத்திரப் பட்டாளத்துடன் பெரிய பட்ஜெட்ல அந்தப் படம் எடுக்கப்பட்டது. ஆனா, ரிலீஸாகிற நேரத்துல சில பிரச்னைகளால் அந்தப் படம் வெளியே வரலை.

என்மேல் இருந்த பாசத்தால் நாகேஷ் சார் சிபாரிசு செய்ய, ‘மோகனப் புன்னகை’ படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவரா நடிச்சேன். அடுத்தடுத்து நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 32 படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். என்ன காரணம்னு தெரியலை… நான் ஹீரோயினா நடிச்ச படங்கள் பெரிசா ஹிட்டாகலை.

அப்போதான் மலையாள ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் சார், அவர் பணியாற்றிய ‘காளியாமர்த்தம்’ படத்தில் கிளப் டான்ஸர் ரோலை எனக்கு வாங்கி கொடுத்தார். அதில் என் கவர்ச்சி நடனம் அதிகம் பேசப்பட, அப்படிப்பட்ட வாய்ப்புகளே தொடர்ந்தன. ‘கிளாமர் ரோல்ல நடிக்கிறது அவ்வளவு எளிதில்லை. உனக்கு வர்ற வாய்ப்புகளை பயன்படுத்திகோ’ன்னு நம்பிக்கை கொடுத்தார் புகழ்பெற்ற நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர்.

‘ராசியில்லாத நடிகை’னு என்மேல் குத்தப்பட்ட முத்திரையை உடைக்க வில்லி, கிளாமர் ரோல், சண்டைக் காட்சினு கிடைச்ச கேரக்டர்கள்ல நூறு சதவிகித உழைப்பைக் கொட்டினேன். மலையாளத்தில் மோகன்லால் சார் மற்றும் தமிழில் சத்யராஜ் சார்கூட அதிக படங்களில் வில்லியாக நடிச்ச பெருமையும் எனக்குண்டு.

ஆரம்ப நேரத்தில் என்னைப் புறக்கணிச்ச வங்ககூட, ‘நீங்க ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினாலே படம் ஹிட்டாகிடும். கால்ஷீட் கொடுங்க’ன்னு என்னைத் தேடி வந்தாங்க. அப்போ ரசிகர்கள்கிட்ட இருந்து தினமும் ரெண்டு மூட்டைக் கடிதங்கள் எனக்கு வரும். அதுக்கெல்லாம் நானே கைப்பட பதில் எழுதுவேன். அப்போதைய புகழை ரொம்பவே ரசிச்சேன். விரிவாக படிக்க க்ளிக் செய்க… http://bit.ly/36Vob9e

ஸ்மிதாவின் கடைசி அழைப்பு…

டச்சப் உதவியாளராக இருந்து, டான்ஸராகவும் நடிகையாகவும் ஸ்மிதா தனி டிரெண்ட்டை உருவாக்கினா. ‘அனுராதாவின் வருகையால் சில்க் ஸ்மிதாவின் மார்கெட் குறைஞ்சுடுச்சு’ன்னு பலரும் பேசினாங்க. இதனால, ஆரம்பத்துல அவ என்கிட்ட பேசவே மாட்டா. பிறகு, என்னைப் புரிஞ்சுகிட்டா. பிறகு, அவ தயாரிச்ச படங்கள்ல என்னை நடிக்க வெச்சா. இருவரும் நெருங்கிய தோழிகளானோம். ஆனாலும், பர்சனல் விஷயங்களை யார்கிட்டேயும் பகிர்ந்துக்க மாட்டா.

நடிகை.. நாயகி.. மனுஷி! #சில்க் ஸ்மிதா

என் கணவர் நடன இயக்குநரா வேலை செய்த கன்னடப் படத்தில், ஸ்மிதாவுக்கு நான் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தேன். ஷூட்டிங் முடிச்சு அவ முன்கூட்டியே சென்னை வந்துட்டா. ஒருநாள் இரவு எனக்கு போன் பண்ணி, ‘என் வீட்டுக்கு வா… உன்கிட்ட அவசரமா பேசணும்’னு ஸ்மிதா ரொம்பவே வலியுறுத்திக் கூப்பிட்டா. ‘கர்நாடகாவுல இருந்து சதீஷ் வீட்டுக்கு வந்திட்டிருக்கார். அவருக்குச் சாப்பாடு ரெடி பண்ணணும். போன்லயே விஷயத்தைச் சொல்லு. ரொம்ப அவசரம்னா வீட்டுக்கு வர்றேன்’னு அவகிட்ட சொன்னேன். ‘பரவாயில்லை, நாளைக்கு வா…’னு சொன்னா. அதனால நானும் அமைதியா விட்டுட்டேன்.

அடுத்த நாள் ஸ்மிதா தற்கொலை நியூஸ் பார்த்துட்டு அலறியடிச்சு அவ வீட்டுக்கு ஓடினேன். அவ உடலை நேரில் பார்த்து கதறி அழுதேன். முந்தின இரவில் நான் அவளைச் சந்திக்கப் போயிருந்தா, பிரச்னையைக் கேட்டு தற்கொலை எண்ணத்தைத் தடுத்திருக்க முடியும். அந்தக் குற்ற உணர்வில் இப்போவரை தவிக்கிறேன்…

‘ராகங்கள் மாறுவதில்லை’, ‘மாமன் மச்சான்’, ‘பிரியமுடன் பிரபு’, ‘நேர்மை’, ‘முத்து எங்கள் சொத்து’ உட்பட நிறைய வெற்றிப் படங்கள் அமைஞ்சது. ரஜினி, கமல் உட்பட ஐந்து மொழி சூப்பர் ஸ்டார்களுடன் பல படங்கள்ல நடிச்சேன்.

இந்தக் காலகட்டத்தில குரூப் டான்ஸராக இருந்து டான்ஸ் மாஸ்டரானார், சதீஷ்குமார். நண்பர்களான நாங்க காதலிச்சு திருமணம் செய்துகிட்டோம். பிறகு, டான்ஸ் மாஸ்டர்களாக இணைந்து வேலை செய்தோம். 1996-ம் வருஷம் ஷூட்டிங் முடிச்சுட்டு வரும் வழியில் நடந்த சாலை விபத்தில் சுயநினைவை இழந்துட்டார் சதீஷ். அடுத்த மூணாவது மாதத்துல, எல்லாமுமாக இருந்த அம்மாவும் இறந்துட்டார். ரொம்பவே தவிச்சுப்போனேன்.

குளிப்பாட்டி விடுறது, சாப்பாடு ஊட்டுறது, கதை சொல்றதுனு என் கணவரை குழந்தை மாதிரி 11 வருஷங்கள் பார்த்துக்கிட்டேன். பொருளாதார ரீதியா ரொம்பவே சிரமப்பட்டேன். இந்த நிலையில, 2007-ம் ஆண்டு மாரடைப்பால் என் கணவர் இறந்துட்டார். அதற்கு முன்பே சிங்கிள் பேரன்ட் வாழ்க்கைக்குப் பழகியதால், அதன் பின்னரும் எதற்கும் கலங்காம வாழ்வதற்கு என்னைப் பக்குவப்படுத்திகிட்டேன்…”

– தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்கள் வெற்றிக்கதை சொல்லும் அவள் விகடன் தொடர் பகுதியில் நடிகை அனுராதா பகிர்ந்தவற்றை முழுமையாக வாசிக்க > 80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 27: தினமும் எனக்கு இரண்டு மூட்டைக் கடிதங்கள் வரும்! – நடிகை அனுராதா https://cinema.vikatan.com/tamil-cinema/1980s-evergreens-heroins-actress-anuradha

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.